TN Goverment : ரூபாய் 10, 20  நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுப் பேருந்து நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


ரிசர்வ் வங்கி மூலம் 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து சில மாதங்கள் கழித்தே 20 ரூபாய் நாணயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் 10 ரூபாய் தாள் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக தமிழகத்தில் சென்னையை தவிற பிற மாவட்டங்களில் 10,20 ரூபாய் நாணயங்களை பெரும்பாலும் யாரும் வாங்குவதில்லை.


அந்த நாணயங்களை வாங்கவும் பயன்படுத்தவும் மறுக்கின்றனர். இந்த நாணயங்கள் ஒருசில பகுதிகிளில்  செல்லாது என்ற வதந்தியும் பரவி உள்ளது. இதனால் மக்கள் அதனை கொடுத்தால் கூட வியாபாரிகள் முதல் பேருந்து வரை அனைத்து தரப்பும் வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு வாங்க 10,20 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் வழங்கினால் அதை வாங்க மறுப்பதாக பேருந்து நடத்துனர்கள் மீது புகார் எழுந்தது..


அந்த புகாரை அடுத்து தமிழக போக்குவரத்து கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,  “மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் பயணிக்கும்போது உரிய பயணச்சீட்டினை பெற ரூ.10 மதிப்பிலான நாணயங்களை நடத்துநர்கள் மறுப்பின்றி பெற்று உரிய பயணச்சீட்டினை பயணிகளுக்கு வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும்,  மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர்கள் தமது பணியின்போது, பயணிகள் ரூ.10 & ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பயணச்சீட்டு வாங்க அளிக்கும்போது நடத்துநர்கள் பெறமறுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, அனைத்து அரசு போக்குவரத்துக்கழக நடத்துநர்களுக்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசால் வெளியிடப்படும் ரூ.10/- & ரூ.20/- மதிப்பிலான நாணயத்தை பயணிகள் பயணச்சீட்டு வாங்க மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநரிடம் அளிக்கும்போது அதனை நடத்துநர்கள் மறுக்காமல் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இதன் மூலம் மீண்டும் உத்திரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 & ரூ.20 மதிப்பிலான நாணயத்தை பெற்றுக்கொள்ள நடத்துநர்கள் மறுக்கக்கூடாது. அவ்வாறு நடத்துநர்கள் ரூ.10, ரூ.20 மதிப்பிலான நாணயத்தினை பெற்றுக்கொள்ள மறுப்பதாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஏதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் அனைத்து நேரக்காப்பாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் ஏதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.