ஜிஎஸ்ட் கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில அமைச்சர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.


இந்தக் கூட்டத்தில் உறையாற்றிய அவர், "நம் வரலாற்றைச் சார்ந்த காரணங்களால், மத்திய அரசாங்கத்துடன் நேரடி வரிவிதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் குவியும்படியும், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களைப் பிரித்து வழங்கிடவும் நம் மதிப்புமிக்க அரசியலமைப்பு வழிவகுத்தது. இது இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானது. ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும் மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளது.


சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி. அமைப்பின் கட்டமைப்பு வடிவமைப்பானது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது. செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன. அவற்றில் சில



  • ஜிஎஸ்டி கட்டமைப்பிள் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்தவேண்டும்.

  • ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது. மேலும் உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.

  • தனித்தனியாக இயங்கும் கண்காணிப்பு / அமலாக்க மாதிரி (மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆய்வாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு இடையில் எளிமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டும்.

  • கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் கொண்ட சட்டங்களை விதித்துள்ளதன் மூலம் அமைப்பிலுள்ள குறைபாடுகளை ஈடுசெய்யும் உத்தி, சாக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டாளர்களைத் அதற்கெதிராக சிந்திக்கத் தூண்டியுள்ளது.




மேற்கண்ட பிரச்சினைகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவது ஆகும். மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு. ஒன்றிய அரசு எப்படி ஒரு ஒருங்கிணைந்த அரசாக இருக்கிறதோ (ஒரு தேசத்தை ஒன்றிணைப்பதில்), அதே போல் ஒரு வழித்தோன்றலாகவும் இருக்கிறது (குடிமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூட ஒவ்வொருவரும் ஒரு மாநிலத்திலிருந்து வந்தவர்களே). ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் உட்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாநிலத்தின் வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே ஆவர்.


மனக்கசப்புடனும், வேண்டா வெறுப்புடனும் ”நன்கொடையாளராக" ஒன்றிய அரசு ஒருபோதும் செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது. இவ்வாறு செய்வது, அதன் அடித்தளமாக உள்ள மாநிலங்களுக்கு எதிராக செயல்படுவது போல் ஆகும். இன்றைய கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்வோம். சரக்குகள் மற்றும் சேவைகள் வலைதளம் அமைப்பில் (GSTN) நேரம் மற்றும் பொருள் (T&M) என்ற முறை மூலமாக மனித உழைப்பை குறைக்கும் பொருட்டு தகவல் தொழில் நுட்பம் குறித்த திட்டங்களை வடிவமைப்பதற்கான கால அவகாசத்தை 31.03.2022 பதிவாக்கம் வரை நீட்டிப்புச் செய்வதையும், விலைப்பட்டியல் தகவு (IRP) எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதன்மூலம் மின்பட்டியல் பதிவாக்க சேவையை திறம்படவும், இலவசமாகவும் வழங்கும் நடவடிக்கையையும் தமிழக அரசு ஆதரிக்கிறது. GSTN அமைப்போடு தொடர்புடைய அனைவரையும் அவ்வமைப்பில் இணைக்கும் முயற்சியாக மாநில வரி அலுவலர்களை மாற்றுப்பணி முறையில் பணிபுரிய வைக்கும் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் மாற்றுப்பணியில் பணிபுரிய பரிந்துரைக்கப்பட்ட தகுதி, மாநிலவரித்துறையில் பணிபுரியும் மூத்த அலுவலர்கள் தேர்வு ஆவதற்கு ஏற்றார்போல் இருப்பது அவசியமாகிறது. இம்மன்றத்தினை கேட்டுக் கொள்கிறேன்.


கோவிட்-19 பெருந்தொற்றுக்கான குறிப்பிட்ட பொருட்களின் மீதான தற்காலிக ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விலக்கு, மற்றும் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டி / தயாரிப்பு கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் கோவிட் சோதனை கருவிகள் ஆகியவற்றுக்கான வரி விகிதம் குறைப்பினை நாங்கள் ஆதரிக்கிறோம்.




சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நிறுவனங்களால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய கிளைக்கு வழங்கப்பட்ட டை-எத்தில் கார்பமைசின் மாத்திரைகளுக்கு வரி விகித குறைப்பு கப்பல் பழுது பார்ப்பிற்கு வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைப்பு, மற்றும் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு முன்மொழியப்பட்டுள்ள தெளிவுரைகள் மற்றும் அங்கன் வாடிகளுக்கு விலக்கினை நீட்டித்தது உள்ளிட்ட வரி விகித பரிசீலனைச் குழுவின் பரிந்துரைகளை நாங்கள் ஏற்கிறோம். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கான வரி விலக்கு கோரிய விண்ணப்பத்தின் மீதான வரி கொள்கைக்கு பதிலாக பொதுச் செலவினத்திலிருந்து மானியமாக வழங்குதல், குறிப்பாக பயனாளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு உருவாக்குவதையுமே மிகவும் பயனுள்ள கொள்கையாகவும் அவர்களுக்கு வழங்கும் சிறந்த உதவியாகவும் இருக்கும் என்ற பரிந்துரையினை நாங்கள் ஏற்கிறோம். இந்த பெருந்தொற்றுக் காலத்தில் வரி விகித உயர்வு என்பது பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்பதால், வரிவிகித பரிசீலனைக் குழுவின் ஜவுளி மற்றும் காலணிகள் மீதான தலைகீழ் வரிவிகித கட்டமைப்பின் திருத்தம் தொடர்பான பரிந்துரையினை அடுத்த கூட்டம் வரை தள்ளி வைக்கலாம் என்று கருதுகிறோம். எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால் (ENA) மீதான சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பது குறித்து ஒருமித்த கருத்து எட்டாததால், இதனை தள்ளி வைக்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன்"  எனத் தனது உரையில் தெரிவித்தார்.