தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


அடுத்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான களப்பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் பணி நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் நடைபெற்று ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அந்த வகையில் தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. 


வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. மாவட்ட அளவிலான பட்டியலை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகரிகள் வெளியிடுவார்கள் என்றும், அதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவோ அல்லது தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுமட்டும் இல்லாமல் அடுத்த மாதம் 4,5,18 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் அடிப்படையில் பரிசீலனைக்கு வரும் பெயர்களின் சேர்ப்பு, திருத்தம் மற்றும் நீக்கம் பணிகள் டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்றும் தேர்தல் ஆணையத்தில் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது ஆனதும் தானாக பெயர் சேர்க்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு ஏதுவாக, ஆண்டுதோறும் ஜனவரியில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: TN Cabinet Meeting: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31-ல் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்...ஆலோசிக்கப்படும் விஷயங்கள் என்ன?


Sivagangai School Leave: மருது பாண்டியர்களின் நினைவு நாள்.. சிவகங்கையில் 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..