பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூறுவது உண்மைக்கு புறப்பானது என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


”உண்மைக்கு புறம்பானது”


”25.10.2023 அன்று நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார் படேல் சாலையில் செய்யப்பட்ட செயலாகும். இந்த நிகழ்வில் புகாரில் தெரிவிக்கப்பட்டது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், அவர்கள் அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. அதேபோல் ஏப்ரல் 19, 2022 அன்று மயிலாடுதுறை சென்ற போது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது.


"ஆதாரங்கள் உள்ளன”


ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன. இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்திற்கும் காணொளி ஆதாரங்கள் உள்ளன.


மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளது போன்று எந்தவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பிற்காக சர்தார் படேல் சாலையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும், பலத்த காவல் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், உடனடியாகக் கைதுசெய்யப்பட்டார். மேற்படி வழக்கில் குற்றவாளி முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே. கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும்.  ஆளுநர் அவர்களுக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 


நடந்தது என்ன?


கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக நடந்து வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.


இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓட முயன்றவரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் சென்னை நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்(42) என்பது தெரியவந்தது. இவர் கைது செய்யப்பட்டு, நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்  உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.