TN Electricity Bill: தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வந்தால், மக்களுக்கு கட்டணம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது.
மின்கணக்கீடு முறை:
தமிழ்நாட்டில் உள்ள மின் இணைப்புகளுக்கான, பயன்பாட்டு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது நினைவுகூறத்தக்கது. குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்திய பிறகே, குறிப்பிட்ட வீடுகளுக்கான மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மின்கட்டண விவரங்கள்:
தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. அதேநேரம், 100 யூனிட்டை கடந்து மின்சாரம் பயன்படுத்தினால்,
- வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, 0 முதல் 400 யூனிட்கள் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.80 வசூலிக்கப்படுகிறது.
- 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.45 வசூலிக்கப்படுகிறது
- 501 முதல் 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.8.55 வசூலிக்கப்படுகிறது
- 601 முதல் 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.9.65 வசூலிக்கப்படுகிறது
- 801 முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.70 வசூலிக்கப்படுகிறது
- 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11.80 காசுகள் வசூலிக்கப்படுகிறது
மாதந்தோறும் மின்கணக்கீடு கோரிக்கை:
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாடு கணக்கீடு எடுக்கப்படுவதால், மொத்த பயன்பாடு என்பது எளிதாகவே இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட்களை கடந்து விடுகிறது. அதோடு, மின்சார பயன்பாடு 400 யூனிட்களுக்குள் அடங்கிவிட்டால், ஒரு யூனிட்டிற்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.4.80 செலுத்தினாலே போதுமானது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு சேர்த்து கணக்கிடுவதால் மொத்த பயன்பாடு அதிகரிக்கிறது. 400 யூனிட்களை கடந்தால் குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.45 முதல் ரூ.8.55 வரை செலுத்த வேண்டி உள்ளது. குறிப்பாக வெயில்காலத்தில் அதிக நுகர்வு காரணமாக, மின்கட்டணமாக ஷாக் அடிக்கும் வகையில் அமைந்துவிடுகிறது. இதன் காரணமாகவே மாதந்தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு செய்து, கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக கொடுத்த வாக்குறுதி:
இத்தகைய சூழலில் தான் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக ஆட்சி அமைந்ததும் மாதந்தோறும் மின் கனக்கீடு மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார். ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளாகியும் அந்த வாக்குறுதி கிடப்பிலேயே இருந்தது. இந்நிலையில் தான், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நிறைவடைந்ததும், மாதம் ஒரு முறை மின்பயன்பாட்டை கணக்கிடும் முறை நடைமுறைக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
6 மாதங்களில் நடைமுறைக்கு வரும் திட்டம்?
அரசின் திட்டம் தொடர்பாக பேசும் மின்வாரிய அதிகாரிகள், “ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணியாணை வழங்கப்படவுள்ளன. இதையடுத்து, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறும். தொடர்ந்து 6 மாத காலத்துக்குள், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட சில பகுதிகளிலாவது மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையிலாவது தொடங்க வேண்டும் என்ற கட்டாயத்தில், உயரதிகாரிகள் செயல்பட்டு வருவதாக” தெரிவித்தனர். இதன் மூலம், அடுத்த 6 மாதங்களில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கும் முறை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர மக்கள் ஹாப்பி
மாதம் ஒருமுறை மின்பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்போது, தற்போதைய நடைமுறைப்படியே முதல் 100 யூனிட்கள் இலவசம் என்றால் மின்கட்டணம் கணிசமாகவே இருக்கும். அதோடு, மொத்த மின்சார பயன்பாடும் நடுத்த குடும்பங்களில் 400 யூனிட்களுக்குள்ளாகவே அடங்கிவிடும். இதனாலும் கட்டணம் கணிசமாக குறையும். அதுவே இரண்டு மாதங்களுக்கு சேர்த்து கணக்கீடு செய்தால் மிக எளிதாக 400 யூனிட்களை கடக்கலாம். இதனால் மின்கட்டணம் பெரும் சுமையாக மாறும். அதோடு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால், மின் கணக்கீடும் துல்லியமாக இருக்கும். அநாவசியமாக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இது பொருளாதார ரீதியாக நலிவடைந்து பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நடுத்தர மக்களுக்கு அதிலிருந்து மீண்டு வர ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
திமுகவின் திட்டம்:
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகிறது. சட்ட ஒழுங்கு பாதிப்பு, பல தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாதது ஆகியவை முதன்மையாக உள்ளன. இந்நிலையில் தான் தேர்தல் நெருங்கும் காலத்தில், மாதந்தோறும் மின்கணக்கிடும் முறை பயன்பாட்டிற்கு கொண்டு வர திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை சமூகமாக உள்ள, நடுத்தர மக்களின் ஆதரவைப் பெற அரசு திட்டமிடுகிறது. இது தேர்தலிலும் தங்களுக்கு பலன் அளிக்கும் என திமுக திட்டமிடுகிறது. முதலமைச்சர்களின் அரசியல் கணக்கு அப்படி இருக்க, மாதந்ந்தோறும் மின் கணக்கீடு என்பது தங்களது மாத பட்ஜெட் கணக்கிற்கு லாபகரமானதாக இருக்கும் என்பதே தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. எனவே மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யும் திட்டத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.