நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், புதிய உத்தரவை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால் தமிழ்நாடு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


டிஜிபி போட்ட உத்தரவு - 10 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க ஆணை


மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் காவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், தாங்கள் புதிதாக எந்த மாவட்டத்திற்கு அல்லது எந்த புதிய காவல்நிலையத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்படப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் காவலர்கள் உள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை


நாடாளுமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதால், அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அதில், நாடாளுமன்ற தேர்தல் எந்த பாரபட்சமும் இன்றி நடைபெற, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர்களையும் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே டிஜிபி இந்த புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.


வழக்கமான நடைமுறை - பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சிரமம் ?


இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றி அந்தந்த ஊரில் செட்டில் ஆகிவிட்ட காவலர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, காவலர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களையும் அவர்கள் குடும்பத்தார் அதே பகுதியில் பணியில் இருந்தால் அவர்களையும் மாறுதல் செய்து அழைத்துப் போக வேண்டிய சூழலுக்கு காவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


ஓய்வு பெறவுள்ள காவலர்களுக்கு விலக்கு அளிக்க உத்தரவு


அதே நேரத்தில் பணி ஓய்வு பெறவுள்ள காவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு தேர்தல் பணிகள் எதையும் ஒதுக்க வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தன்னுடைய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.


10ஆம் தேதிக்குள் பட்டியலை தர வேண்டும் - டிஜிபி சங்கர் ஜிவால்


சொந்த மாவத்தில் பணிபுரியும் காவலர்கள் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அதற்கான பட்டியலை ஜனவரி 10ஆம் தேதிக்குள் தயாரித்து தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மண்டல ஐ.ஜி.க்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு சலுகை ?


உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள், பணிட மாற்றத்தால் ஏதும் பிரச்னைகள சந்திக்கும் காவலர்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவிக்கவும் இந்த முறை வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரான்ஸ்பர்






இந்நிலையில், இன்று தலைமை காவலர்கள், முதுநிலை காவலர்கள் என 1,847 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், சென்னையில் பணியாற்றிய 340 காவலர்கள் பிற மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.