தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6 ஆயிரத்து 250 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 13 ஆயிரத்து 378-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 364 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.




தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 6 லட்சத்து 11 ஆயிரத்து 836 ஆகும். பெண்கள் 4 லட்சத்து ஆயிரத்து 506 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 35 நபர்கள் ஆவர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 6 ஆயிரத்து 689 நபர்களும், பெண்கள் 4 ஆயிரத்து 297 ஆகும்.

கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 6 ஆயிரத்து 250 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 20 ஆயிரத்து 369 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 48 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 26 பேர் தனியார் மருத்துவமனையிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 99 ஆயிரத்து 246 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 55 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இருப்பவர்கள் 7 ஆயிரத்து 275 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 804 ஆகும்.