தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 6172 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.


இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 10941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,02,392-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 3347 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,86, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 6,172 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,14,119 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,157 ஆக அதிகரித்துள்ளது.


நேற்றைய நிலவரப்படி, 10723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 பேர் நோய் பாதிப்பால் மரணமடைந்தனர். கடந்த 14 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 91,644 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி மொத்த கொரோனா பாதிப்பு 15879 மற்றும் நாள் ஒன்றுக்கு சராசரி பாதிப்பு எண்ணிக்கை 2500-ஆக இருந்தது.