தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 419, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என 8 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி அதிகபட்ச அளவாக 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. 97ஆயிரத்து 201 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரே நாளில் தொற்று 8 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 71 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா
சென்னையில் ஏற்கெனவே இரண்டாயிரத்து 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாயிரத்து 636 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 795 பேரும், கோவையில் 583 பேரும், திருவள்ளூரில் 453 பேரும், தஞ்சாவூரில் 151 பேரும் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், காஞ்சிபுரத்தில் 303 பேரும், திருச்சியில் 273 பேரும், திருப்பூரில் 227 பேரும், சேலத்தில் 214 பேரும் மதுரை மற்றும் வேலூரில் 167 பேரும், திருவாரூரில் 121 பேரும் பாதிக்கப்பட்டனர். ராணிப்பேட்டையில் 179 பேரும், கிருஷ்ணகிரியில் 167 பேரும், ஈரோட்டில் 132 பேரும், திருவண்ணாமலையில் 125 பேரும், நாமக்கல்லில் 109 பேரும், விழுப்புரத்தில் 54 பேரும் பாதிக்கப்பட்டனர்.
உயிரிழப்பு
கொரோனா காரணமாக இன்று 33 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 032 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்கள் ஏதும் இல்லாத 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,000-ஐ தாண்டியது
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் நாலாயிரத்து 920 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 759 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 12 வயதிற்குட்பட்ட 250க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி 128 சிறுவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.