தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளனின் விடுதலைக்கு பல்வேறு கட்சியினரும் மகிழ்ச்சியை தெரிவித்து வரும் நிலையில் இந்த விடுதலையை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி,''முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளனர்



முன்னதாக, பேரறிவாளன் எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபு பேட்டி அளித்துள்ளார். 


இது குறித்து அவர் கூறும்போது, “பேரறிவாளவன் சிறையில் நிறைய பட்டப்படிப்புகளை முடித்திருக்கிறார். சிறையில் அவருடைய அனைத்து நன்னடத்தைகளையும் கவனத்தில்கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னொரு விஷயம் ஒரு அமைச்சரவை எடுத்த முடிவை ஒரு ஆளுநர் இவ்வளவு காலதாமதப்படுத்தி இருக்கிறார். அப்படியானால் ஆளுநர் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறாரா என்ற கோணத்திலும் நீதிபதிகள் இதனை பார்த்துள்ளனர். ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதனடிப்படையில்  இரண்டரை வருடத்திற்கு மேலாக ஆளுநர் இந்த முடிவை காலம் தாழ்த்தி வைத்ததால், 142 விதியின்  கீழ் நாங்களே விடுதலை செய்கிறோம் என்று கூறி பேரறிவாளனை நீதிபதிகள் விடுதலை செய்தனர்.” என்று பேசியுள்ளார். 


பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பில் மனித உரிமை மட்டுமல்லாது, மாநில உரிமைகளும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அதோடு, முப்பத்தி இரண்டு ஆண்டு கால வாழ்வை சிறைக் கம்பிகளுக்கு இடையே தொலைத்த அந்த இளைஞர் இன்று விடுதலைக் காற்றை சுவாசிக்க இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகளும், வரவேற்பும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ள முதலமைச்சர், தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத திருமதி அற்புதம்மாள் அவர்கள் தாய்மையின் இலக்கணம் பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன், ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டி இருக்கிறது. அற்புதம்மாளுக்கு என் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்