இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கண்டன பொதுக்கூட்டம்:


அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினரின் பிரமாண்ட கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிவானந்தா காலனி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன், மார்க்சிஸ் ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், மனித நேய மக்கள்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலை தலைவர் காதர்மொய்தீன் உள்ளிட்டோர் பங்கேற்று பாஜகவை கடுமையாக விமர்சித்தனர்.


தலைவர்கள் கண்டனம்:


இக்கூட்டத்தில் பேசிய திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த அமைச்சரை முடக்கிவிட்டால் தாமரை மலர்ந்துவிடும் என கருதுகிறீர்களா? எனபாஜகவை நோக்கி கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசிய போது, செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பது, முதலமைச்சர் ஸ்டாலினை முடக்க எடுக்கப்படும் முயற்சி என குற்றம் சாட்டினார்.  டி.ஆர்.பாலு பேசும்போது,  ”11 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வருவதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர் செந்தில்பாலாஜி எனவும், மத்திய அரசின் மிரட்டலுக்கு அடிபடியாத மாநிலம் தமிழ்நாடு என்றும்” கூறினார். இதேபோன்று மற்ற தலைவர்களும் அமலாக்கத்துறையையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்தனர். இதில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.


ஸ்டாலின் நன்றி:


இந்நிலையில், கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய கண்டன பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி! இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும். வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்த்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்” என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.