அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை சிவானந்தா காலனி பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும்  பாஜகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டதாக" குற்றச்சாட்டினார்.


"மோடி கை வைத்தால் தேன் கூட்டில் கைவைத்த கதையாக தானாகும்"


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “மோடி தமிழ்நாட்டில் கை வைத்தால் தேன் கூட்டில் கைவைத்த கதையாக தானாகும். நாங்கள் திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள் என முதலமைச்சர் சொன்னது போல மட்டுமல்ல. நாங்கள் திமிறி எழுந்து பெருமூச்சு விட்டாலே, நீங்கள் தாங்க மாட்டீர்கள். அமலாக்கத்துறை மிரட்டலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவர் மீது புகார் இருந்தால் விசாரிக்க கூடாது என்பது அல்ல எங்கள் வாதம். விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக செந்தில் பாலாஜி சொன்னார். சோதனையின் போது தலைமறைவாக சென்று விட்டாரா? வழக்கு வந்தால் சந்திக்க தயார் என தைரியமாக தான் இருந்தார். செந்தில் பாலாஜியை அறையில் பூட்டி வைத்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் என்ன?


"அதிமுக பாஜகவின் தொங்கு சதையாக மாறி விட்டது"


அதிமுக ஆட்சியில் கொடுத்த புகாருக்கு, இப்போது எதற்கு சோதனை நடத்த வேண்டும்? அதற்கு என்ன நோக்கம்? தலைமை செயலகத்தில் எந்த தகவலும் சொல்லாமல் உள்ளே செல்ல அதிகாரம் உள்ளதா? துணை ராணுவ படை வைத்துக் கொண்டு தலைமை செயலகத்திற்குள் சோதனை செய்த போது, முதலமைச்சர் காவல் துறையை முடக்கி விட்டு இருந்தால், உங்கள் நிலை என்ன?


அதிமுக பரிதாபத்திற்குரிய கட்சி. பல முறை ஆட்சியில் இருந்த உங்களுக்கு ஆளுநர் அதிகாரம் என்ன என தெரியாதா? செந்தில் பாலாஜியை நீக்க மனு அளிப்பது கேவலமாக இல்லையா? ஆளுநர் நினைத்தால் ஒருவரை அமைச்சராக நியமித்து விட முடியுமா? அதிமுக பாஜகவின் தொங்கு சதையாக மாறி விட்டது. அமைச்சராக பதவி ஏற்க ஆளுநரிடம் யாரும் ஒப்புதல் கேட்கவில்லை. ஆளுநர் ஒப்புதல் தர வேண்டிய அவசியம் இல்லை.


"அரைவேக்காடு ஆளுநர்"


அமைச்சர்களுக்கு பொறுப்புகளை ஒதுக்குவது முதலமைச்சரின் பொறுப்பு. அரிச்சுவடி தெரியாத அரைவேக்காடு ஆளுநராக இருக்கிறார்.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பாஜகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டது. டெல்லியை போல தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. அண்ணாமலை பாஜகவிற்கு ஆலோசணை சொல்லுங்கள்.


மக்களுக்கு ஆலோசணை சொல்லாதீர்கள். முதலமைச்சர் மிரட்டும் அளவிற்கு நீங்கள் பெரிய ஆளா? திமுகவின் கடைசி மட்ட தொண்டன் போதும் உங்களை மிரட்டுவதற்கு. அடிமை அதிமுக இருக்கும் தைரியத்தில், கொத்தடிமைகளை விலை பேசி வாங்கியது போல மிரட்ட நினைத்தால், எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும். சீண்ட நினைத்தால் தமிழகமே குலுங்கும். அதைத்தொடர்ந்து இந்தியாவே குலுங்கும்” எனத் தெரிவித்தார்.