தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். 

Continues below advertisement


தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நலத்திட்டங்களை வழங்கியும், அரசு சார்பில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். சமீபத்தில் கூட தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ரயில் பயணம் மேற்கொண்டார். இது தொண்டர்கள், பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளை வழங்குகிறார். மேலும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 


இதன்பின்னர் அவர் மதியம் 12 மணிக்கு மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் 2வது அலகினையும், மணப்பாறை சிப்காட் வளாகத்தையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து 2.45 மணியளவில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னாசிப்பட்டியில் நடைபெறும் மருத்துவத்துறை கட்டிடங்களை  திறந்து வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்குகிறார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவர் இல்லத்திற்கு சென்று நலம் விசாரிக்கிறார். 


முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மார்க்கமாக திருச்சி செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். அதேசமயம் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.