திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


பெரியாரால் 1962ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தில் தலைவராக நியமிக்கப்பட்டவர் கி.வீரமணி.தற்போது உள்ள வயது மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர்.  அவர் இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள கி.வீரமணி இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி புத்தகம் பரிசாக வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் மா.சுப்பிரமணியம், திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வீரமணி குடும்பத்தினர் உடனிருந்தனர். 


அப்போது பேசிய தி.க. தலைவர் கி.வீரமணி, ‘மனிதகுலம் எங்கெல்லாம் அவதிப்படுகிறதோ  அங்கே புதிய பாதையை ஏற்படுத்தி கொடுப்பதே திராவிடம். நாம் அனைவரும் திராவிட இந்தியாவிற்கும், இந்துத்துவ இந்தியாவிற்கும் நடைபெறும் கொள்கை போராட்டத்திற்கு அனைவரும் தயாராக வேண்டும். மேலும் பெரியாரை உலகமயமாக்க வேண்டும். அதேபோல் திராவிட ஆட்சி சட்டத்தின் மூலம் நடைபெறும் ஆட்சியாகும். அமலாக்கத்துறையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என முதலமைச்சர் தெரிவித்தார். அதுவே எனது பிறந்தநாள் பரிசாகும்’ என தெரிவித்துள்ளார்.






தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பிறந்தநாள் பதிவில், “அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா கி.வீரமணியின் 91-ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடர வேண்டும்! சமூகநீதிக் களத்தில் "வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்"!” என தெரிவித்துள்ளார்.