ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் தமிழ்நாட்டில் நாள்தோறும் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் கடுமையாக எழுந்தது. இதனைத் தொடர்ந்து அப்போதைய அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிறைவேற்றியது.  ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ரத்து செய்தது. 


இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது. அதற்கு உடனடியாக அவர் ஒப்புதல் அளித்தார். 


இதனைத் தொடர்ந்து அக்டோபர் 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றபட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக  ஆளுநர் மாளிகை தரப்பில் சில விளக்கங்கள் கேட்கப்பட்ட நிலையில், உடனடியாக தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்களாக இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 


இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது. அதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் இன்றைய தினம் (ஏப்ரல் 10)  சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆளுநர் அதிகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த பதிவில், “சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றத்துக்கு வழங்கிவிட்டு, அதற்கு ஒப்புதல் கையெழுத்து போடும் உரிமையை ஒரு நியமன ஆளுநருக்கு வழங்கியது மக்களாட்சி மாண்பல்ல... இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் முன்னெடுப்புகளை எடுப்போம்.  “Withhold” என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என விதண்டாவாதமாக பேசும் ஆளுநர், அரசின் கொள்கைகளை,தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை,சட்டமன்றத்தின் இறையாண்மையை கொச்சைப்படுத்தி பேசுகிறார்.


ஆளுநரின் “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்” விழுங்கி விட்டது. ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், மாண்புமிகு குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்” என தெரிவித்துள்ளார்.