44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமையான தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட் சூட் உடன் வந்தார். அதன்பின்னர் நிறைவு விழாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இவரும் ட்ரம்ஸ் வாசித்தார்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “2000 ஆண்டுகளுக்கு முன்பாக கனியன் பூங்குன்றனார் தன்னுடைய புறநானூறு பாடலில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை கூறியிருந்தார். அந்தப் பாடலின் அர்த்தம் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் நம்முடைய சகோதாரர்கள் என்பது. அந்த சகோதரத்துவ எண்ணத்துடன் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாங்கள் நடத்தினோம்.
அந்தவகையில் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியது என்று பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் தங்களுடைய சமூக ஊடங்களில் பதிவிடும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களைவிட நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பன்னாட்டு திருவிழாவாக அமைந்தது.
ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. இதன்காரணமாக அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி விளையாட்டு அரங்கம் நிறுவப்பட உள்ளது. மேலும் சென்னையில் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி மற்றும் ஆசிய கடற்கரை விளையாட்டுகள் நடத்த முயற்சி எடுத்து வருகிறோம். அத்துடன் சிலம்பாட்டத்தை தேசிய அங்கீகாரம் பெற தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது.
கபடி, சிலம்பம் உள்ளிட்ட 12 விளையாட்டு போட்டிகளுக்கான முதலமைச்சர் கோப்பை தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இதன்மூலம் பல புதிய திறமைகளை கண்டறிய உள்ளோம். வெற்றி தோல்வி எப்போதும் முக்கியமானதில்லை. பங்கேற்பது தான் முக்கியமான ஒன்று. ஆகவே பங்கேற்பதை யாரும் விட்டுவிட கூடாது. 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரை சென்னையில் நடத்த ஒப்புதல் அளித்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சர்வதேச வீரர்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை சென்னை வரவேண்டும். ஏனென்றால் உங்களுக்காக ஒரு சகோதரர் இங்கு இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்