பல்வேறு மாதங்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்தான சச்சரவுகள் நிகழ்ந்து வரும் நிலையில், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுகவின் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .


 


 




அதன் தொடர்ச்சியாக கட்சி தலைமையில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட  நிலையில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று, அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டு , இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது . இதனால்  அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரின் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். 


பிறகு இரு பிரிவினர் தரப்பிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இறுதியாக அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிசாமியிடம் தலைமை அலுவலக சாவியை கொடுக்கும்படி நீதிமன்றம் தரப்பில்  உத்தரவிட்டதன் பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்பட்டு அதன் சாவியை இபிஎஸ் அணியிடம் வழங்கப்பட்டது . மேலும், அதிமுக நிர்வாகிகளும் , தொண்டர்களும் இரு அணிகளாக பிரிந்து, நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் ஒருவரையொருவர் நீக்கப்படுகிறார்கள், சேர்க்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்புகளை இரு தரப்பில் இருந்தும்  வெளியிட்டு வருகின்றனர்.


 


 




இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் அதிமுக-வின் இரு பிரிவினை சேர்ந்த  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அப்பொழுது தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வமும் அவருக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் தவறாது அவர்தம் வாக்கை செலுத்தினார். அதைத் தொடர்ந்து,  ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் சென்னையில் நடைபெற்ற தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் இருவருக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டு ஓபிஎஸ் தரப்பில் செல்வராஜூம், இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டனர் . 


அப்பொழுது அங்கு இரு தரப்பினருக்கும் இடையே சிறு சலசலப்புகள் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு உட்கட்சி பூசல்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து வருகிறார். அதே போல் ஓபிஎஸ் தனது சொந்த ஊரான தேனி மற்றும் பெரியகுளத்திலும் தனது ஆதரவாளர்களை நேரில் சென்று சந்தித்து வருகிறார். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் சிலர் சுவரொட்டிகளை ஒட்டி வரும் நிலையில், அதற்கு போட்டியாக இபிஎஸ் ஆதரவாளர்களும் சுவரொட்டிகளை ஒட்டி இரு அணியினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . இந்த செயலானது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


 


 




ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்டத்தில் இபிஎஸ் அணியே அதிக அளவில் இருப்பதாக எண்ணிய நிலையில் தற்போது ஓபிஎஸ்க்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் ஒட்டிய சுவரொட்டியால் மீண்டும் கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இறுதியில் தற்போது கரூரிலும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்களின் வால்போஸ்டரால் மீண்டும் களைகட்டி உள்ளது கரூர் அரசியல் களம். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண