திருநெல்வேலியில் நடந்த மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் சிறுபான்மையின மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,
திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டுள்ள திட்டங்களில் முக்கியமாக சிலவற்றை சொல்ல வேண்டுமென்றால்,
1. திராவிட மாடல் அரசு மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கி படிக்க அவர்களுக்கான பெற்றோர்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பையும், பல்வகை செலவினத் தொகையும் உயர்த்தி உள்ளோம். இதனால், இதுவரை 884 பள்ளி மாணவ, மாணவிகளும், 3 ஆயிரத்து 824 கல்லூரி மாணவ, மாணவிகளும் பயன் அடைந்துள்ளனர்.
2. கிராமப்புற மாணவ, மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்று இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு 6 கோடியே 57 லட்சம் ஊக்கத்தொகை
3. வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சிறப்பான திட்டம்
4. 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கிற 90 ஆயிரத்து 723 மாணவிகளுக்கு 1000 ரூபாய் கல்வி உதவித்தொகை
5. அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவுத்திட்டம்
6. கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
7. உபதேசியர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான நிபந்தனைகளை தளர்வு செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளோம்.
8. திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களை உருவாக்கி தமிழ்நாட்டில் இருக்கும் 46 சங்கங்களுக்கு அரசு மானியமாக 13 கோடி 86 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம்.
9. சிறுபான்மையினரால் நடத்தப்படக்கூடிய 486 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ் வழங்கியுள்ளோம்.
10. ஜெருசேலத்திற்கு புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளோம்.
11. திண்டுக்கல்லில் புனித சூசையப்பர் தேவாலயம், ஆரோக்கிய அன்னை தேவாலயம், தென்காசி மறுமலர்ச்சி ஜெப தேவாலயம் என தமிழ்நாட்டில் 16 தேவாலயங்களை 2.15 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைத்துள்ளோம்.
12. தொன்மையான தேவாலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திருநெல்வேலி கால்டுவெல் தேவாலயம், மதுரை புனிதஜார்ஜ் தேவாலயம், சிவகங்கை புனித இருதயர் ஆண்டவர் தேவாலயம் என 12 மாவட்டங்களில் 20 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
13. விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் என 6 மாவட்டங்களில் புதியதாக கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
14. 13 மாவட்டங்களில் கல்லறைத் தோட்டங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி விடுவித்துள்ளது.
15. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களில் 597 கோடி ரூபாய் மதிப்பிட்டில் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்.
16. சிறுபான்மையின மக்கள் கல்வி, பொருளாதாரத்தில் உயர கல்விக்கடன், சுயதொழில் தொடங்க திட்டம்.
17. வெற்றி நிச்சயம் திட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்களுக்கு தொழில் தொடங்க முன்னுரிமை.
18. ஓய்வூதிய திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
19. டிச.18 சிறுபான்மையினர் உரிமை நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
20. மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலமாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தி அவர்கள் மொழி, ஆளுமை திறமைகளை வெளிக் கொண்டு வந்திருக்கிறோம்.
இன்று முழுவதும் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும். அந்தளவு பார்த்து பார்த்து உங்களுக்கு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.