மத்திய தணிக்கைக் குழு அண்மையில் வெளியிட்டு இருந்த அறிக்கையில் மத்திய அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தால், கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பாரத் மாலா' திட்டத்தில் துவாரகா எக்ஸ்பிரஸ் சாலையும் அடங்கும். அந்த திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை போடுவதற்கு ரூ.18 கோடியே 20 லட்சம் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.251 கோடியாக செலவு உயர்ந்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. 


சுங்கச்சாவடிகள் விதிகளை மீறி பொதுமக்களிடம் இருந்து ரூ.154 கோடி ரூபாயை கட்டணமாக வசூலித்துள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே மொபைல் எண்ணின்  மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி வளர்ச்சி திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு விதிமுறைகளை மீறி தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஓய்வூதிய திட்டத்தின் பணத்தை பிரதமரின் விளம்பர செலவிற்காக பயன்படுத்தியுள்ளது. HAL நிறுவனத்தில் விமான இன்ஜின் வடிவமைப்பில் ஏற்பட்ட கடுமையான குறைபாட்டால் ரூ.154 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது போன்ற குற்றச்சாட்டுகளும் தணிக்கை குழுவால் முன்வைக்கப்பட்டது. மத்திய தணிக்கை குழு அறிக்கையின்படி, பாஜக அரசு ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.  


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் வெளியிட்ட பாட்காஸ்ட் சீரிஸின் 2 வது தொடரில் சிஏஜி அறிக்கை பற்றி விரிவாக பேசியுள்ளார். அதில், “ முறைகேடுகளுக்கெள்ளாம் உச்சம் சுங்கச் சாவடி முறைகேடு தான். தினசரி முறையில் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 5 சுங்கச் சாவடிகளை தணிக்கை செய்ததில் ரூ. 132 கோடியே 5 லட்சம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் எத்தனை லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருக்கும்? 2021 - 22 ஆம் ஆண்டில் 100 ரூபாய் வருவாய் ஈட்ட 107 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதால் இந்திய ரயில்வேயின் நிதிநிலை கவலைக்கிடமாக உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ” என குறிப்பிட்டுள்ளார். 






இந்நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாட்காஸ்ட் சீரிஸின் மூன்றாவது தொடர் வெளியிட்டுள்ளார். அதில் சிஏஜி அறிக்கை வெளியிட்ட அதிகாரிகளை கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டு பேசியுள்ளார். அதாவது, “ இரண்டாவது பாட்காஸ்ட் சீரிஸில் சி.ஏ.ஜி அறிக்கையில் பா.ஜ.க செய்த 7 மெகா ஊழல் குறித்து பேசப்பட்டது. அதனை மத்திய அரசே ஒப்புக்கொள்ளும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளனர். இது தொடர்பாக அக்டோபர் 2 வது வாரத்தில் நாளிதழில் செய்தி வெளியானது. அதில் தலைப்புச் செய்தியாக, செப்டம்பர் 12-ஆம் தேதியே சிஏஜி அறிக்கை வெளியிட்ட அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர் என வெளியானது” என பேசியுள்ளார். சிஏஜி அறிக்கை நாட்டில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாக மாறியது. ஆனால் தற்போது வரை மத்திய அரசு தரப்பில் தெளிவான விளக்கம் எதுவும் வழங்கப்படவில்லை என அரசியல் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.