தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அதன்பின்னர் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்ததால் அதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். நேற்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.


இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்திக்கு புத்தகம் ஒன்றை பரிசு அளித்தார். அவர் சோனியா காந்திக்கு ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய ‘journey of a civilzation: indus to vaigai’ என்ற புத்தக்கத்தை பரிசாக அளித்தார். இந்தப் புத்தகம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. 




 


இந்தப் புத்தகத்தின் சிறப்பு என்ன?


இந்தப் புத்தகத்தில் இரண்டு முக்கிய கேள்விகளுக்கு பாலகிருஷ்ணன் விடையளிக்கும் வகையில் எழுதியுள்ளார். ஒன்று சிந்து சமவெளி நாகரிகம் மறைய தொடங்கிய போது அந்த மக்கள் எங்கு சென்றனர்? மற்றொன்று, சங்க இலக்கியம் தொடங்கிய காலம் எப்போது? அதை யார் எழுதியது ? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் எழுதியுள்ளார். 


அவரின் கூற்றுகளுக்கு ஏற்ற மரபனு ஆய்வுகள் மற்றும் பொருட்களின் அகழ்வாராய்ச்சி ஆகியவற்றை மேற்கொள் காட்டியுள்ளார். மேலும் சங்க இலக்கியங்களில் செம்மை, செங்கல், சியான் ஆகியவை தொடர்பாக குறிப்புகள் இடம்பெற்று உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும்’ என மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் சங்க இலக்கியங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை குறிப்பிட்டுள்ளதாகவும் புத்தக்கத்தில் கூறுகிறார்.




அத்துடன் சிந்துசமவெளி தொடங்கி ஆதிச்சநல்லூர் வரை எந்தந்த பானைகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன என்று ஆய்வை குறிப்பிட்டுள்ளார். மேலும் பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்த பொருட்கள், கலாச்சாரம் ஆகியவை குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். இந்தப் புதக்கம் தமிழ் மொழி தொடர்பாக ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு முக்கியமான புத்தகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு தமிழ் மொழி குறித்த பல ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுகள் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. 


 


இந்தியாவில் மிகவும் பழமையான மொழி என்றால் அது தமிழ் தான். உலகளவில் பழமையான மொழி தமிழ் என்ற கூற்று சற்று விவாத பொருளாக தான் உள்ளது. ஏனென்றால் அதற்கு சரியான ஆதாரம் இல்லாதது ஒரு காரணம். தமிழில் முதல் முதலாக கண்டு எடுக்கப்பட்ட இலக்கிய நூல் தொல்காப்பியம். இதில் அகத்தியரின் அகத்தியம் குறித்தும் அதற்கு முன்பாக வந்த ஐந்திரன் குறித்தும் இவர் மேற்கொள் காட்டியிருப்பார். எனவே தமிழ் மொழி தொல்காப்பியத்திற்கு முன்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது என இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இருப்பினும் இந்த நூல்கள் மற்றும் அவற்றின் காலங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஐந்திரன் என்பது சமஸ்கிருத இலக்கண நூலான பாணினிக்கு முன்பாக வந்தது என்றும் கருதப்படுகிறது. எனவே தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது தெரிகிறது. ஆகவே தான் உலகில் மிகவும் பழமையான மொழி தமிழ் என்ற கூற்று இன்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது. 




தற்போது நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியில் சங்க இலக்கியங்களின் காலம் தற்போது சொல்லப்படும் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்பாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள தமிழி என்ற பிராமி எழுத்துகள் கி.மு.2600 ஆண்டுகளுக்கு முன்பானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே சிந்து சமவெளி காலம் முடிந்த போது சங்க தமிழ் இலக்கியம் தோன்ற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. 


ஆகவே கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தமிழ் மொழியின் வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இருக்கும் என்பதை இந்தப் புத்தகம் சரியாக கூறுகிறது. எனவே தமிழ் மொழி ஆய்வு தொடர்பான சிறப்பான புத்தகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க: மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?