சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி சிறப்பு காவல்படை 2ம் அணி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தாம்பரம் காவல் ஆணையரகம், தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 20 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் தாழம்பூர் மற்றும் கேளம்பாக்கம் காவல் நிலையங்கள் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி மற்றும் செங்குன்றம் ஆகிய இரண்டு காவல் மாவட்டங்களுடன் 25 காவல் நிலையங்களை உள்ளடக்கி செயல்படும். நிர்வாக வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு. செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையங்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லையில் இணைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் புதிதாக அமைக்கப்படுவதன் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்கும், போக்குவரத்தினை சீர்படுத்துவதற்கும், சட்டம் ஒழுங்கு தொடர்பான மக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும் வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதியன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள். மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளதுபோல் சீரமைத்திட இந்த அரசு எண்ணியுள்ளது. அந்த அடிப்படையில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு தனித் தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும்" என்று அறிவித்தார்.
இதற்கிடையே,புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையராக ஏடிஜிபி ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவம் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்காக தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகளை இணைத்து அரசாணை தமிழக அரசு வெளியிட்டது. சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை பேரூராட்சிகளை தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்