தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.


ஏபிபி செய்தித் தளம்..!


ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது. 


இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின்  பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார். 


கேள்வி: மக்களைத் தேடி மருத்துவம், பள்ளிகளில் காலை உணவு, பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து சேவை, புதுமைப்பெண் போன்ற திட்டங்கள் மூலம் பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வரும் தாங்கள், இன்னும் 3 ஆண்டிற்குள் முழு மதுவிலக்கு என்பதையும் கலைஞர் நூற்றாண்டின் பெரும் அறிவிப்பாக வெளியிடுவீர்களா? ஏனெனில் தமிழ்நாடு இல்லத்தரசிகளின் பெரும் கோரிக்கையாக இது இருக்கிறது.


முதலமைச்சரின் பதில்: ”தங்களுடைய கேள்வியிலிருந்தே திராவிட மாடல் அரசு மக்களுக்குப் பயன் தரும் திட்டங்களை, குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மதுவிலக்கு கொள்கையைப் பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான அரசு தெளிவான பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டையொட்டி 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதுபோல படிப்படியாகக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதும் தொடர்ந்து நடைபெறும்.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் தகராறு செய்வது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் செயல்பாடுகள் மீது தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் செலுத்தி, அவற்றின் மீது சட்டப்பூர்வமான எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதுவைப் பயன்படுத்துவோரால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் களைவதில் முனைப்பாக இருக்கிறோம். இல்லத்தரசிகளின் கோரிக்கையை மனதில் நிலைநிறுத்தியே இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்பதை உங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.”


கேள்வி: நாட்டை ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்தி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு விதைபோட்ட தங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆனால், எதிரும் புதிருமாக இருக்கும் சில கட்சிகள், ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திப்பதில் பெரும் சிக்கல்கள் நேரிடும். இது பா.ஜ.க.வுக்கு சாதகமாகும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது குறித்து தங்கள் பார்வை என்ன?


முதலமைச்சரின் பதில்: ”அந்த எண்ணம் முறியடிக்கப்பட்டு விட்டது. இப்போது "INDIA" என்ற கூட்டணி பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் உருவாக்கப்பட்டு விட்டது. பல கட்சிகளையும் ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில் இணைக்க முடியும் என்பதை இந்திய அரசியலில் தி.மு.கழகம் ஏற்கனவே பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. அதில் முதன்மைப் பங்காற்றிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞருக்கு உண்டு. அதே போல் இப்போது பெங்களூரில் நானும் பங்கேற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் இந்தியாவைக் காப்பாற்ற "INDIA" உருவாகியிருக்கிறது.


நாட்டைக் காப்பாற்ற வேண்டும். நம் அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு உள்ள ஒற்றுமை வெளிப்பட்டு விட்டது. இப்படி ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளை பார்த்து பா.ஜ.க. மிரளுகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்றவற்றை ஏவி ஒடுக்கிவிடலாம் என ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இதிலிருந்தே, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பால் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பயம் வெளிப்படுவதை உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே மக்களும் பா.ஜ.க.ஆட்சியின் கவுன்ட் -டவுன் பெங்களூருவில் துவங்கி விட்டது என்றே நம்புகிறேன். ”


கேள்வி: தேசிய அளவில் தங்களின் மெகா கூட்டணி கனவு மெய்ப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த பா.ஜ.க.வை வீழ்த்த எப்படிப்பட்ட வியூகங்களை தங்களின் சார்பில் முன் வைத்துள்ளீர்கள்?


முதலமைச்சரின் பதில்: ”நீங்கள் கேட்பதுபோல் பா.ஜ.க. சக்தி வாய்ந்த கட்சி அல்ல. அவர்களுக்கு பலம் இருக்கிறது என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைவதைப் பார்த்து ஏன் அவர்கள் அலற வேண்டும்? பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்புக்கான முதல் கூட்டத்திலேயே தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டம் முடிந்து சென்னைக்குத் திரும்பிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, "எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது. இதேபோல தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினேன்.


எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன். ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனப் பேசியதையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டேன். என்னைப் போன்று கருத்து சொன்ன கூட்டணித் தலைவர்களின் எண்ணங்களுக்கு முழு வடிவம் கொடுக்கும் வகையில்தான் பெங்களூரு கூட்டத்தில் INDIA உருவாகியிருக்கிறது. களத்தில் என்ன வியூகங்கள் என்பதை தேர்தல் நெருங்க நெருங்க நீங்களே அறிந்து கொள்வீர்கள்.” 


இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.