அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்படுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு, ஏபிபி நாடு செய்தி தளத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேகமாக பதிலளித்துள்ளார்.


ஏபிபி செய்திதளம்..!


ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது.  இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின்  பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார். 


கேள்வி: முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பெரிய அளவு பேசப்படாத பா.ஜ.க. இன்று நேர்மறை அல்லது எதிர்மறை என ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து பொதுமக்களிடையே பரவலாகி வருகிறது. இதனை தாங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


முதலமைச்சரின் பதில்: ”நேர்மறை அரசியலுக்கும் பா.ஜ.க.விற்கும் துளியும் சம்பந்தமில்லை. எதிர்மறை அரசியலை மட்டுமே செய்து நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி குளிர் காய நினைக்கும் கட்சி பா.ஜ.க. 9 ஆண்டு கால சாதனைகளை சொல்ல முடியாமல் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து சாதித்துள்ள மாநில அரசுகளை களங்கப்படுத்தி வெற்றி பெற்று விட முடியாதா என்று கனவு காணும் கட்சி பா.ஜ.க. அப்படிப்பட்ட பா.ஜ.க. தமிழ்நாட்டில் மக்களிடையே பரவவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை. மீடியாக்கள் மத்தியில் அப்படியொரு கற்பனை தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அவ்வளவுதான்! பொதுவாக ஆளுங்கட்சி என ஒன்று இருக்கும்போது, எதிர்கட்சியாக இருப்பவர்கள்தான் பேசுபொருளை உருவாக்குவார்கள். தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.விடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. ஊழல் அதிமுகவை கொண்டாடி- அதன் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை பா.ஜ.க. ஈர்க்க முயற்சிக்கிறது. அது கானல் நீராகவே முடியும். ஒரு ஆலோசனை! தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமியிடம் கேட்டு, உரிய பதில் பெறுங்கள்.”


கேள்வி: குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்றாலும், விசாரணை, கைது என நெருக்கடிகளை சந்திக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து, அ.தி.மு.க.-பா.ஜ.க. போன்ற கட்சிகள் கடும் குற்றச்சாட்டை வைக்கின்றன. குற்றமற்றவர் என நிரூபித்தபின் மீண்டும் அமைச்சராக்குவோம் எனத் தாங்களே நடவடிக்கை எடுப்பதன் மூலம், தங்கள் அரசு சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட அரசு என்பதை நிரூபிக்கலாமே, தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கலாமே..?


முதலமைச்சரின் பதில்: ”குற்றங்களுக்கோ, குற்றவாளிகளுக்கோ தி.மு.க ஒருபோதும் ஆதரவளிக்காது. எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதைச் சட்டரீதியாக I எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதை நடைமுறையாகக் கொண்டு, இன்று வரை நிரூபித்தும் வருகிறது. திரு.செந்தில்பாலாஜி அவர்கள் விவகாரத்தில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நடந்திருக்க வேண்டியது ஒன்றிய அரசின் அமைப்புகளே தவிர, தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு அல்ல. அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள், வழக்குகள், சோதனைகள் எல்லாம் உண்டு. ஆனால், அவர்கள் மீது பாயாத கைது நடவடிக்கையை செந்தில் பாலாஜி அவர்கள் மீது பாய விட்டதன் மூலம் சர்ச்சையை உருவாக்கியது பா.ஜ.க அரசுதான். தி.மு.க. அல்ல. அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா பற்றி கேள்வி கேட்கும் பா.ஜ.க. முதலில் தங்கள் அமைச்சரவையில் உள்ள "குற்றப் பின்னணி" கொண்ட அமைச்சர்களை நீக்கட்டும். தார்மீக நெறிமுறை என்பது அரசியலில் நிச்சயம் ஒரு வழிப் பாதை அல்ல.”



கேள்வி: டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, தொழில்துறையில் முதலீடுகளை ஈர்த்து வருகிறீர்கள். ஆனால், எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சுற்றுப்பயணம். சொந்தப் பயணம் என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். இதுவரை வந்த முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்ற அவர்களின் விமர்சனத்திற்குத் தங்களின் பதிலடி?


முதலமைச்சரின் பதிலடி: ”பிரதமர் மோடி அவர்களும், தரை தவழ்ந்து, ஊர்ந்து, காலைத் இருந்த பழனிசாமி அவர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள்தான். அவர்களுடைய அனுபவத்தை அவரது கட்சியினர் எங்கள் மீது திணிக்க நினைத்திருக்கலாம். திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரை, பத்தாண்டுகள் படுகுழியில் தள்ளப்பட்ட தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை இந்திய அளவில் முதன்மையாகக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் டிரில்லியன் டாலர் என்ற இலக்குடன் பயணிக்கிறோம். முதலீடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டியதில்லை. வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து முதலீடுகள், அதனால் உருவான தொழிலகங்கள், அதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைத்துள்ள கிடைக்கவிருக்கின்ற வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட எல்லா விவரங்களும் வெளிப்படையாக வழங்கப்படும்.


கேள்வி: ஒரு தந்தையாக, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர் உதயநிதி யாருடைய செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.?


முதலமைச்சரின் பதில்: ”உதயநிதிக்கு நான் தந்தை. இளைஞரணிக்கு நான் தாய். அமைச்சரவையில் எல்லாரும் என் தோழர்கள். அதனால், தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை உதயநிதி அவர்கள் ஏற்று செயல்படுத்துகிற விதத்தைத் தந்தையாகவும் தாயாகவும் தோழமை உணர்வுடனும் கவனித்து வருகிறேன். சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்” என முதலமச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.