கோயம்பேடு - வேளச்சேரி ரூட்டில் சென்றுகொண்டிருந்த முதலமைச்சரின் கான்வாய் பின்னால் அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. உடனடியாக கான்வாய் வாகனங்கள் இடதுபுறமாக ஒதுங்கி வழிவிட்டது. அதிவேகத்தில் ஆம்புலன்ஸ் கடந்து சென்றது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கான்வாய் வாகனங்களை குறைத்தும், கான்வாய் வாகனங்களுக்காக பொதுமக்கள் காத்திருக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.






முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய்களை குறைக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தனது கான்வாய் செல்லும்போது பொதுமக்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். கான்வாய்க்காக செல்லும் 12 வாகனங்களில் 6 வாகனங்களை குறைக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். முதல்வர்களுக்கு கோர்செல் பிரிவு போலீஸார் பாதுகாப்பு அளிப்பது வழக்கம். இது எஸ்பி தலைமையில் இயங்கும் தனிப்பிரிவு. இதில் ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் இடம்பெறுவார்கள். அவர்கள் 3 ஷிப்டுகள் முறையில் இயங்கும் வகையில் பாதுகாப்பை அளிப்பார்கள். முதலமைச்சரின் கான்வாயில் இவர்கள்தான் பொறுப்பேற்று செல்வார்கள்.


முதல்வரின் இல்லம், அலுவலகம், அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிகழ்ச்சிக்கு முன்னர் பாதுகாப்பு குறித்து கண்காணித்து அனுமதி வழங்குவது, நிகழ்ச்சி நடக்கும்போது நிகழ்ச்சிப்பகுதி, சுற்றுப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிப்பார்கள். முதலவருடன் உடன் நின்றும் பாதுகாப்பு வழங்குவார்கள். இதற்கான ஒரு கேம்ப் அலுவலகம் முதல்வர் இல்லத்திலேயே இயங்கும். அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வார்கள். அதேபோல முதல்வர் கான்வாய் எனப்படும் குண்டுத்துளைக்காத, அரசு இலச்சினை பொருத்திய கார், விஐபி எஸ்கார்டு என மூன்று பிரிவினர் மூலம் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய்களை குறைக்கச்சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் தனது கான்வாய் செல்லும்போது பொதுமக்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்


முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. அதே நேரத்தில் முதல்வரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என நீதிபதி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது