அம்பேத்கர் பிறந்தாளில் சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது! புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை! பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது. நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது! சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்தநாளில் அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அம்பேத்கர் பிறந்தாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் - அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா உள்ளிட்டோர் “சமத்துவ நாள் உறுதிமொழி” ஏற்றனர்.
இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ., மற்றும் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், முனைவர் தமிழச்சிதங்பாண்டியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சென்னை தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் த.வேலு, எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ., கழக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், கழக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மருத்துவர் எழிலன் நாகநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா. செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எம்.பி.கனிமொழி மரியாதை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
பல்வேறு அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் பிறந்த நாளுக்கு அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.