CM M.K.Stalin Tweet: ’’நடிப்பு சுதேசிகள்தான் இந்த கோட்சே கூட்டம்’.. ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மருது சகோதரர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

திருச்சியில் நேற்று மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் ஆரியம் திராவிடம் என்று எதுவும் கிடையாது. தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றோர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் எல்லாம் இன்னும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர். 

Continues below advertisement

மருது சகோதரர் நினைவு நாளில் சிவகங்கையில் 144 தடை உத்தரவு போட பட்டுள்ளது. அக்டோபர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை மக்கள் இயல்பாக நடமாட தமிழ்நாடு அரடு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மருது சகோதரர்களின் தியாகத்தினை மக்கள் கொண்டாடக்கூடாது என தமிழ்நாடு அரசு நினைக்கிறது. அரசியல் கட்சி தலைவரின் நினைவு தினத்தின் அரசால் இப்படி தடை போட முடியுமா..?

இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளை பொது மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது. காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் குறிப்பிட்ட சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்கள ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்.” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்

 இந்தநிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மருது சகோதரர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான மறவர் மருதிருவரின் புகழ் ஓங்குக! *சின்ன மருதும், பெரிய மருதும் பீரங்கிகளுக்கு முன்னால் வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஷ்! இது 1801-ஆம் ஆண்டு!

*கழக அரசு அமைந்ததும் மருது சகோதரர்கள் சிலையைச் சென்னையில் அமைக்க 34 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுச் சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவண்ணத்தில் 'தென்பாண்டிச் சிங்கம்' எனக் கலை வடிவம் பெற்று, வாளுக்குவேலி வழியாகக் காலத்தால் அழியாத காவியமாக அவர்களது கதை நிலைத்திருக்கிறது.

தி.மு.கழக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்! இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் 'நடிப்புச் சுதேசிகள்' எனப் பாடினார்.” என பதிவிட்டுள்ளார். 

Continues below advertisement