சென்னையிலுள்ள தனியார் பள்ளி விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்ததின் விளைவாக, இன்று மேலும் சில பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவிகள் ஆணையத்தின் மின்னஞ்சலுக்கு புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ஆணைய தலைவர் திருமதி. சரஸ்வதி ரங்கசாமி அவர்கள் சேத்துப்பட்டில் இயங்கிவரும் மகரிஷி வித்யா மந்திர் மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள “செட்டிநாடு வித்யாஷ்ரமம்" ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது உறுப்பினர் டாக்டர். சரண்யா ஜெயக்குமார் மற்றும் இணை இயக்குனர் திரு. ராஜ் சாவணக்குமார் உடன் சென்றனர். இந்தப் பள்ளிகளில் நடத்தப்பட்ட விசாரமையில் அடிப்படையில் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அத்தகவல்களின் அடிப்படையில் மேலும் விசாரணை செய்வதற்காக மகரிஷி வித்யா மந்திர், சம்பந்தப்பட்ட ஆசிரியர், புகார்கொடுத்த மாணவிகள் என அனைவருக்கும் 10.06.2021 அன்று விசாரணை மேற்கொள்ள ஏதுவாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே போல ராஜா அண்ணாமாலபுரம். செட்டிநாடு வித்யாஷ்ரமம் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் அனைவரையும் தீவிர விசாரணைக்காக 08.06.2021 அன்று ஆணையத்தில் ஆஜராகும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் SL ஜூஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, செனாய் நகர் சம்பந்தமாக இதே பாலியல் புகார் பெறப்பட்டதின் அடிப்படையில் அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அனைவருக்கும் சம்மன் அனுப்ப ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, 07.06.2021 அன்று விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட இத்தகைய புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து அந்தந்த துறை தலைவர்களுக்கும், அரசுக்கும் தக்க பரிந்துரைகளை வழங்கிவருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.