அரசு ஊழியர்கள்‌- ஆசிரியர்கள்‌ வாழ்வாதாரக்‌ கோரிக்கைகள்‌ தொடர்பான எந்தவித அறிவிப்பும்‌ வெளியிடாததற்கு தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ கடும்‌ அதிருப்தி தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. 


இந்நிலையில் இதற்கு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ கடும்‌ அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:


''தமிழ்நாடு அரசின்‌ 2023-24 ஆம்‌ ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்‌, அரசு ஊழியர்கள்‌ - ஆசிரியர்கள்‌ தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததற்கு தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ கடும்‌ அதிருப்தியினை வெளிப்படுத்துகிறது.


அரசு ஊழியர்கள்‌- ஆசிரியர்கள்‌ தொடர்பான தேர்தல்‌ கால வாக்குறுதிகளான, 


* புதிய ஓய்வூதியத்‌ திட்டம்‌ கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத்‌ திட்டம்‌ மீண்டும்‌ நடைமுறைக்குக்‌ கொண்டு வரப்படும்‌.


* அரசு துறைகள்‌, கல்வி நிறுவனங்களில்‌ காலியாக உள்ள 3.5 இலட்சம்‌ பணியிடங்கள்‌ நிரப்பப்படும்‌.


ஆகியவை குறித்து தமிழக அரசின்‌ 2023-24 ஆம்‌ ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும்‌ எந்தவித அறிவிப்பும்‌ வெளியிடப்படாதது பணியாளர்கள்‌ மத்தியிலே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


அதோடு மட்டுமல்லாமல்‌, 2021ல்‌ இந்த அரசு ஆட்சிப்‌ பொறுப்பேற்ற பின்னர்‌, 


* வழங்கப்பட்ட மூன்று தவணை அகவிலைப்படிகளை ஆறு மாதம்‌ காலம்‌ தாழ்த்தி, நிலுவைத்‌ தொகையானது மறுக்கப்பட்டுள்ளது.


* மத்திய அரசு வழங்கும்‌ அகவிலைப்படியினை அதே தேதியில்‌ மாற்றமின்றி நிலுவைத்‌ தொகையுடன்‌ வழங்குவதற்கான கொள்கை முடிவு அறிவிக்கப்படவில்லை.


* ஆண்டுக்கு ஒருமுறை 15 நாட்கள்‌ ஈட்டிய விடுப்பினை சரண்‌ செய்வது என்பது காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது.


* 2023 ஆம்‌ ஆண்டில்‌ 2000க்கும்‌ குறைவான காலிப்‌ பணியிடங்களை நிரப்புவதற்கான இலக்கானது தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தினால்‌ அறிவிக்கப்பட்டுள்ளது.


* பணியாளர்களின்‌ பணி மூப்பு குறித்தான உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாக, தலைமைச்‌ செயலகத்தில்‌ உதவி பிரிவு அலுவலர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ நிலையில்‌ ஓராண்டிற்கு மேலாக பதவி உயர்வு வழங்கப்படாமல்‌ இருப்பதற்கான அரசின்‌ நிலைப்பாடுக்‌ குறித்து எந்த அறிவிப்பும்‌ இல்லை.


* தலைமைச்‌ செயலகத்தைப்‌ பொறுத்தவரையில்‌, கடும்‌ இட நெருக்கடி உள்ள நிலையில்‌, அதைக்‌ களைவதற்கான வழிமுறைகள்‌ குறித்த எந்த நிலைப்பாடும்‌ வெளியிடப்படவில்லை.


* பதவி உயர்வுகள்‌ எந்தவித தாமதமுமின்றி உரிய தேதியில்‌ வழங்கப்படும்‌ என்ற அரசின்‌ கொள்கை அறிவிப்பும்‌ வெளியிடப்படவில்லை.


மேலும்‌, அரசு ஊழியர்கள்‌-ஆசிரியர்கள்‌-ஒய்வூதியர்கள்‌ ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படியினை ஆறு மாத காலம்‌ காலந்தாழ்த்தி-நிலுவைத்‌ தொகையினை மறுத்து, அதோடு 15 நாட்கள்‌ சரண்‌ விடுப்பு சலுகையினைப்‌ பறித்து, அதன்‌ மூலம்‌ ஈட்டிய வருவாயினைக்‌ கொண்டு, வருவாய்‌ பற்றாக்குறை குறைந்து விட்டது என்று பெருமை கொள்வதில்‌ என்ன நியாயம்‌ இருக்கிறது? 


4 இலட்சத்திற்கும்‌ மேலாக உள்ள காலிப்‌ பணியிடங்களை நிரப்பாமல்‌, படித்து விட்டு அரசின்‌ வேலைக்காக காத்திருக்கும்‌ இளைஞர்களின்‌ அரசு வேலைவாய்ப்புக்‌ கனவினை இருளாக்கி, அதன்‌ மூலம்‌ மிச்சப்படுத்தும்‌ வருவாயைக்‌ கொண்டு வருவாய்‌ பற்றாக்குறை குறைந்துள்ளது என்பது 69 விழுக்காடு சமூக நீதிக்கு எதிரானதல்லவா ?


தமிழக முதலமைச்சர்‌ அரசு ஊழியர்கள்‌-ஆசிரியர்களின்‌ வாழ்வாதார தேர்தல்‌ கால வாக்குறுதிகள்‌ குறித்து நடப்பு பட்ஜெட்‌ கூட்டத்‌ தொடரில்‌ அறிவிப்பு வெளியிட வேண்டும்‌ என்று தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ கேட்டுக்‌ கொள்கிறது''.


இவ்வாறு தமிழ்நாடு தலைமைச்‌ செயலகச்‌ சங்கம்‌ தெரிவித்துள்ளது.