சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்து பேசும்போது, மாநிலம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூபாய் 626 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 100 கோயில்களில் ரூபாய் 100 கோடி செலவில் தேர் மற்றும் குளங்கள் சீரமைக்கப்படும். மாநிலம் முழுவதும் போதிய நிதி வசதியில்லாத 12 ஆயிரத்து 955 ஆலயங்களல் ஒரு கால பூஜை திட்டத்திற்காக ரூபாய் 130 கோடி ஒதுக்கப்பட்டு, அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்தமருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மை வாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டில் புதியதாக சித்தா பல்கலைகழகம் அமைக்கப்படும். சுற்றுலாத்துறைக்கு ரூபாய் 187 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.” இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசுப் பொறுப்பேற்றது முதல் அறநிலையத்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார். மேலும், பல இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களும் மீட்கப்பட்டது.
இந்த நிலையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூபாய் 626 கோடி மதிப்பிலான நிலங்களும், சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்பதே தி.மு.க.வின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. அந்த கோரிக்கையையும் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த மாதம் மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
மேலும், மாநிலத்தில் பல்வேறு கோவில்களும் போதிய அளவு வருவாய் இல்லாமல் தவித்து வந்தன. குறிப்பாக, கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், போதிய நிதியில்லாத கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்திற்கு ரூபாய் 130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.