மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சசிகலா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ். சிவகுமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.


அப்போலோ மருத்துவமனை தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டியை விசாரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சர்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கை பொய்யானது என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில், இந்தியாவிலும் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்கள். சிறப்பான மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள் என சொல்லி இருக்கிறார். 


ஆனால், அதற்கு போய் அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். அரசு அலுவலர்கள் சொல்லும் வார்த்தைகளை கூட திரிப்பது தவறு. அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் ஒவ்வொரு முடிவையும் விமர்சனம் செய்ய முடியாது. இக்கட்டான நேரத்தில், தலைபோகிற நேரத்தில் அரசு அலுவலர்கள் ரிஸ்க் எடுத்துதான் வேலை செய்ய முடியும்" என்றார்.


அரசு அலுவலர்களின் முடிவுகளை அரசியல் ரீதியாக பார்க்க கூடாது எனக் கூறியுள்ள அண்ணாமலை, "இதை எல்லாம் அரசியலாக்கினால் அலுவலர்கள் வேலை செய்ய முடியாது" என்றார். 


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவ குழு திருப்தி இருப்பதாக கூறியுள்ளது என்றும் பொத்தாம் பொதுவாக அவர்கள் பேசுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, அலுவலர்களை இதில் இழுக்காதீர்கள் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.


"ஐஏஎஸ் அலுவலர்களை இதில் உள்ளே இழுப்பது சரியான விஷயம் அல்ல. இந்த அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆறுமுகசாமி ஆணையத்தில் எதுவும் அறிவியல்பூர்வமாக இல்லை" என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


ஆறுமுகசாமி ஆணையம் சமர்பித்த அறிக்கையில் பல குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அண்ணாமலை இம்மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளார்.


மேலும், தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அண்ணாமலை, "அனைவரும் பட்டாசு வெடியுங்கள். சிவகாசி பட்டாசு விற்பனையாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும்; ஒரு நாளில் எந்த மாசும் நேராது” என்றார்.