தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியது போல், தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்று தருமபுரியில் உயர் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் தான் ஆளுநராக இருந்த காலகட்டத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி வரை விற்கப்பட்டதாக, தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நான் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக இருந்தேன். அங்கு நிலை மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40-50 கோடிக்கு விற்கப்பட்டது. 


தமிழகத்தில் நான் ஆளுநராக இருந்தபோது, சட்டப்படி 27 பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமித்தேன். வேலை எப்படி நடக்கிறது என்பதை அவர்கள் (பஞ்சாப் அரசு) என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் திறமையானவர், திறமையற்றவர் என்று கூட எனக்குத் தெரியாது. கல்வி மேம்படுவதை நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். 


இந்நிலையில் தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியது போல், தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடக்கவில்லை என்று உயர் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரியில் அவர் பேசியதாவது:


’’பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது,துணை வேந்தர் நியமனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என  இதேபோன்று ஒரு விழாவில், பேசினார். நான் அப்பொழுதே அவரது கருத்துக்கு, மறுப்பு தெரிவித்து, விளக்கம் கொடுத்தேன். 


ஒரு துணை வேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழு 10 பேரைத் தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்புகிறது. இந்த 10 பேரில் மூன்று பேரை தேர்வு செய்து அந்த மூன்று பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துவார். இந்த நேர்காணலில் அரசு சார்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கும் உயர் கல்வித் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சருக்கோ தொடர்பு இல்லை. 


இந்த நிலையில் தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 கோடி முதல் 50 கோடி வரை விற்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தில் துணை வேந்தர்களை நியமிக்கின்ற வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழகத்தின் மீது குறை கூறுவது ஏற்புடையதல்ல. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரைச் சார்ந்தது. அதில் எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழுப் பொறுப்பு ஆளுநரே. 


இதில் ஆளுகின்ற அரசுக்கோ முதலமைச்சர், கல்வி அமைச்சருக்கோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்த நியமனத்தில் ஒருவேளை பணம் கை மாறி இருந்தால் அது ஆளுநரையே சாரும். மேலும் 22 துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவர் சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு, பட்டியல் கொடுத்து இருந்தால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல்தான்’’.


இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.