தமிழக பாஜகவில் இருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா 2வது முறையாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


கட்சி சொல்வது என்ன?


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர்  திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்.ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழிசையை விமர்சித்தது காரணமா?


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் தீவிர விசிறியாக செயல்பட்டு வருகிறார் திருச்சி சூர்யா. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி ஒரு இடம் கூட வெல்லாமல் படுதோல்வியடைந்தது. இதற்கு பாஜக முன்னாள் தலைவரான தமிழிசை, கட்சியில் குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கருத்து ஒன்றை நேர்காணலில் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழிசையை விமர்சித்திருந்தார் திருச்சி சூர்யா. இந்த உட்கட்சி மோதல் விவகாரம் பாஜக மேலிடம் வரை சென்று அங்குள்ள தலைவர்களுக்கு அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகார பின்னணியில் தான் திருச்சி சூர்யா நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


இது 2வது முறை


திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா கடந்த 2022 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்தவரின் மகன் பாஜகவில் இணைந்தது அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் திருச்சி சூர்யா 


இதனிடையே பாஜக பெண் நிர்வாகி டெய்சி சரணுடனான கருத்து மோதலின் போது அவரை ஆபாசமாக திருச்சி சூர்யா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இதைத் தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி சூர்யா 6 மாதத்துக்கு நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கட்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்தார். 


தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் திருச்சி சூர்யா பாஜகவில் சேர்க்கப்பட்டதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். தற்போது மீண்டும் அவர் நீக்கப்பட்டுள்ளார். 


ஓராண்டுக்கு நீக்கப்பட்ட கல்யாணராமன்


”இதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி திரு.கல்யாணராமன் அவர்கள் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்படுள்ளது.