தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பதவியேற்றார். இதனால் தமிழ்நாடு பாஜக தலைவராக அடுத்த யார் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தச் சூழலில் நேற்று தமிழ்நாட்டு பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவருக்கு கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 


இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வாகியுள்ள அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் , “நமது தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது. நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது.






தமிழ்நாட்டில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.


அழகான மாநிலமான நம் தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தமிழ் பற்றும், நமது தமிழ் பண்பாடு மீது மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர், கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின். கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும், நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஜெய் ஹிந்த...வாழ்க பாரதம், வளர்க தமிழ்நாடு” எனப் பதிவிட்டுள்ளார்.




கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தில் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகா சென்றார் அண்ணாமலை. தன்னுடைய அதிரடி நடவடிக்கைகள் மூலம் அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்ற அவர், கர்நாடகாவை கலக்கும் தமிழர், கர்நாடகாவின் சிங்கம் என்ற அடைமொழியில் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வந்துபோனார். தன்னுடைய ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பின்னர் இவர் பாஜகவில் இணைந்தார். அப்போது பேசிய அண்ணாமலை, கட்சியில் ஒரு தொண்டனாக சேர்ந்திருக்கும் தான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி சார்பில் எடுக்கும் எவ்வகையான முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றும் கூறினார். அவர் பேசிய சில நாட்களிலேயே பாஜவின் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார். அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: "ஓபிஎஸ் வாழ்க.. ஒற்றைத்தலைமை கோஷம்.." - அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு