பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பாஜக தேசிய மகளிரணித் தலைவராக வானதி சீனிவாசன் பதவி வகித்து வருகிறார். மேலும் கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக அவர் பதவி வகித்து வருகிறார். கோவையை சேர்ந்த இவர் கோவை மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே நேற்று திடீரென வானதி சீனிவாசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மருத்துவமனையில் வானதி சீனிவாசனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வானதி சீனிவாசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நலம் சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவனையில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


வானதி சீனிவாசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானதி சீனிவாசன் விரைவில் குணமடைய வேண்டுமென பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 


தொட்டு தொடரும் கொரோனா தொற்று


இந்தியாவில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார மற்றும் மனித இழப்புகளை உண்டாக்கிய கொரோனா தொற்றால் மக்கள் பல மாதங்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மத்திய மற்றும் மாநில அரசுகள் நோய்தொற்றை தடுக்க பல நடவடிக்களை எடுத்தது. தொற்று குறைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் மெல்ல மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆங்காங்கே இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.