சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டருகே இருந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு சவால் விடும் வகையில் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


சென்னை பனையூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு உள்ளது. இதன் அருகே சுமார் 50 அடி உயரம் கொடிக்கம்பம் நடப்பட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக முறையான அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம் அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும்,பொதுமக்களும் கொடி கம்பத்தை அகற்ற சொல்லி புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 


இதனையறிந்த பாஜக தொண்டர்களும் அப்பகுதியில் குவிய போலீசார் இருபக்கமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை போலீசார் வரவழைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்தனர். இதனைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களை வேனில் ஏற்றி அருகிலுள்ள மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். 


இந்த சம்பவத்தை கண்டித்து திமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.


திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய  பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.


பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.


நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.