சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர பாஜக கொடி கம்பத்தை நேற்று இரவோடு இரவாக போலீசார் அகற்றினர். அப்போது, பாஜகவினருக்கு போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.






சுதாகர் ரெட்டி பரபரப்பு அறிக்கை


காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் சிலரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு பாஜகவின் தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், பாஜக மாநில தலைவர் இல்லத்தில் இருந்த கொடி கம்பம் அகற்றப்பட்டதற்கும் அதனை தடுக்க முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.






’அண்ணாமலையை கண்டு அஞ்சும் திமுக’


அதோடு, இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரையை கண்டு திமுக பயப்படுவதால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்றும் சுதாகர் ரெட்டி தன்னுடைய அறிக்கையில் விமர்சித்துள்ளார். மேலும், ஜனநாயக உரிமைகளை மாநில அரசு முடக்க நினைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் சுதாகர் ரெட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


பாஜகவின் வளர்ச்சி அதிர வைக்கிறது


தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி திமுகவை அதிர வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாகவும் அதன் வெளிப்பாடாகவே பாஜகவினர் மீது திமுக அரசு போலீசாரை வைத்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் சுதாகர் ரெட்டி விமர்சித்துள்ளார். அதோடு, திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு விரைவிலேயே தமிழக மக்கள் பதிலடி தருவார்கள் என்றும் சுதாகர் ரெட்டி தனது அறிக்கையில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.






இந்த விவகாரத்தில், ஜனநாயக சக்திகள் ஒன்று சேர்ந்து திமுக அரசுக்கு எதிராக வலுவான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அதோடு, திமுக அரசின் இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு பாஜகவினர் எவரும் அஞ்சமாட்டார்கள் என்றும் திமுகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிராகவும் பாஜக தொடர்ந்து களமாடும் என்றும் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.


சமூக வலைதளத்தில் கொந்தளிக்கும் பாஜகவினர்


அண்ணாமலை இல்லத்தில் அமைக்கப்பட்ட கொடி கம்பம அகற்றப்பட்டதற்கும் காவல்துறையினர் பாஜகவினர் கண்மூடித் தனமாக தாக்கியதாக வீடியோக்களை வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.