பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தமிழ்நாடு பாஜக சார்பில் நடத்தப்பட்டு வந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது வரும் 6ஆம் தேதி நடக்கவிருந்த பாதயாத்திரை 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’39வது நிரம்பிய அண்ணாமலை அக்டோபர் 3ஆம் தேதி பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தார். அவர் தனக்கு, தொடர் இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், உடல் வலி மற்றும் உடல் சோர்வு ஆகிய காரணங்களுக்கு சிகிச்சை எடுக்க வந்தார். இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு 5 நாட்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் பரிசோதனைக்கு வரவேண்டும். 2 வாரங்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் மண் என் மக்கள் பாதயாத்திரை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். யாத்திரை மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதுவரை, இரண்டு கட்ட யாத்திரை நிறைவடைந்துள்ளது. ஊழலுக்கு எதிராகவும், நரேந்திர மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழ்நாட்டில் இருந்தும் எம்.பிக்களை அனுப்ப தமிழ்நாடு மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை தொடங்கப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், என் மண் என் மக்கள் யாத்திரை தேதியில் மற்றம் செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி பாதயாத்திரை மீண்டும் தொடங்கவிருந்த நிலையில், அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு யாத்திரை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பாஜக தலைமை தரப்பில் ட்விட்டர் பதிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நாளை அதாவது அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.