அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கொண்டாட்டத்தை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சில ஸ்கிரீன்ஷாட்டுகளை தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 


உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நாளை திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் நிலையில் இந்த கோயிலில் குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து முக்கிய நபர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 


இப்படியான நிலையில், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கீழ் நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/ பஜனை/ பிரசாதம்/ அன்னதானம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்தார். 






இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பொய் தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “ஆலய நடைமுறைகளில் தலையிட திமுகவுக்கு என்ன உரிமை இருக்கிறது?. தடையை மீறி கோயில்கள் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நடைமுறைகள் தொடரும்” என திட்டவட்டமாக கூறினார். மேலும், “இந்து மத மக்களை மாதம் ஒருமுறை சீண்டிப்பார்க்கும் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் தற்போது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சில ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், “ தி.மு.க.ஆட்சியில் திறமையற்ற, ஊழல், பொய்யர் கூட்டம் அடங்கிய அமைச்சர்கள் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ராமர் கோயில் திறப்பு கொண்டாடப்படுவதைத் தடுக்குமாறு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, மாவட்ட எஸ்பிகளுக்கு அனுப்பிய அறிவுறுத்தல்களின் ஸ்கிரீன் ஷாட்கள் கீழே உள்ளன. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு ஒரு கொடூரமான மாநிலமாக மாறிவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் செயல்களை போல இருக்கிறது. கீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்களை ஏற்க மறுத்து, முடிந்தால் என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு தமிழக அரசுக்கு நான் சவால் விடுகிறேன்.  மேலும் இந்த உரையாடல்களின் முழு விபரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.