இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நோட்டீஸ் விவரத்தைப் பகிர்ந்துள்ளது அந்தக் கட்சி.
தினமலர் நாளிதழின் 23 ஜூன் 2021 தேதியிட்ட இதழில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி குறித்து செய்திவிட்டிருந்தது. அதில் ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்’எனக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றைப் பதிப்பித்திருந்தது.
இந்தச் செய்தி குறித்துக் கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா தற்போது சட்டப்பூர்வ நோட்டீஸை அனுப்பியுள்ளது. அந்தக் கட்சி தினமலருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பதன் சாராம்சம், ‘உங்களுடைய ஊடகத்தின் 23 ஜூன் 2021 தேதியிட்ட நாளிதழில் ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம் ’ எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆதாரமில்லாத இந்தச் செய்தியை நிருபரின் பெயரில் எழுதாமல் ’நமது நிருபர்’ என்கிற பெயரில் பதிப்பித்திருந்தீர்கள். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான உங்களது இந்தச் செய்தியால் தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தேசிய, சர்வதேச அளவில் உள்ள எங்கள் கட்சியினரும் பொதுமக்களும் கொந்தளித்துள்ளார்கள். அதனால் நிர்வாகம் தனது இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று கட்சியிடம் பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் இல்லையென்றால் 100 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கவேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் முதலில் இந்த நோட்டீஸ் குறித்துப் பதிவிட்டிருந்த நிலையில் பின்னர் அந்தப் பதிவை நீக்கியுள்ளார்.
Also Read: கட்டணமில்லா பயணச்சீட்டுகளில் ‘திருநங்கை’ என்கிற பெயர் இடம்பெறும்! - நர்த்தகி நட்ராஜ்