விருதுநகர் அருகே, மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நாகரிமற்ற முறையில் பேசியுள்ளதாகவும், இதுபோன்ற செயல்களை ஒரு அமைச்சர் செய்வது கண்டனத்திற்கு உரியது என்றும், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ள அவர், திமுக அமைச்சர்களை வெளுத்து வாங்கியுள்ளார். அந்த பதிவு குறித்து பார்க்கலாம்.

Continues below advertisement

நயினார் நாகேந்திரனின் பதிவு என்ன.?

நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், “திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது! விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் “மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்” என திமுக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேசியிருப்பது, சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல். தனது அரசுப் பதவியின் மாண்பினை மறந்துவிட்டு இதுபோன்ற கேலி, கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

“ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” எனக் கூறிய @arivalayam  அரியணையில் அமர்ந்ததும் “தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை” எனப் பாதிப் பெண்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது “நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது” எனக் கூறி மீதி பெண்களையும் விரட்டப் பார்க்கிறது.

Continues below advertisement

திமுக அரசிடம் மகளிர் உரிமைத் தொகை வாங்க வேண்டுமென்றால் பெண்கள் தங்களிடமிருக்கும் ஆபரணங்களைக் கூட அணியக் கூடாதா? எப்பேற்பட்ட மேட்டிமைத்தனமான எண்ணமிது? பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களை “ஓசி” எனவும், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களை “ரூ.1000-இல் கிரீம், பவுடர்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க” எனவும், உரிமைத் தொகை வரவில்லை என முறையிடும் பெண்களை “மெண்டல்கள்” எனவும் நாக்கில் நரம்பின்றி வசைபாடும் திமுகவினர், நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டுவதையும், உருவக்கேலி செய்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

எனவே, திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இனியும் இதுபோன்ற விமர்சனங்களைத் திமுக தலைவர்கள் தவிர்ப்பதையும் தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்“ என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இந்த பதிவுடன், அமைச்சர் பெண்களிடம் பேசிய வீடியோவையும் நயினார் நாகேந்திரன் பகிர்ந்துள்ளார்.