தாய்லாந்து நாட்டில் இருந்து விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.12 கோடி மதிப்புடைய, 12 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

Continues below advertisement

அதிகாரிகள் சோதனை

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், கண்காணித்து கொண்டு இருந்தனர்.

அப்போது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30 வயது இளைஞர் ஒருவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 33 வயது இளைஞர் ஒருவர், ஆகிய இரண்டு பேர், சுற்றுலா பயணிகளாக, தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் சென்னைக்கு திரும்பி வந்தனர். அவர்கள் இருவரும் பெரிய பைகள் எடுத்து வந்தனர்.

Continues below advertisement

கண்டுபிடித்துக் கொடுத்த மோப்பநாய்

அவர்கள் இருவர் மீதும், சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்கள் பைகளை, போதைப் பொருள்களை கண்டுபிடிக்கும், மோப்ப நாய் மூலம் பரிசோதித்தனர். மோப்ப நாய் இருவருடைய பைகளிலும், போதைப் பொருட்கள் இருப்பதற்கான சைகைகளை செய்ததோடு, அந்த பைகள் அருகே, கால்களை மடக்கிக் கொண்டு அமர்ந்து விட்டது.

இதை அடுத்து சுங்க அதிகாரிகள், இருவர் பைகளையும் திறந்து பார்த்தபோது, மொத்தம் 8 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அவைகளில் உயர்ரக, பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். 

ரூ.12 கோடி மதிப்புள்ள கஞ்சா

8 பார்சல்களிலும், மொத்தம் சுமார் 12 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி. இதையடுத்து சுங்க அதிகாரிகள் இருவரையும் கைது செய்ததோடு, ரூ.12 கோடி மதிப்புடைய 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

அதோடு இருவரையும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த கஞ்சாவை யாரிடம் கொடுப்பதற்காக கடத்தி வந்தனர்? இந்த ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், ரூ.12 கோடி மதிப்புடைய உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் உட்பட, 2. பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.