ஸ்டாலின் குடும்பம்தான் தமிழகத்தை வண்டிகட்டி இழுக்கிறதா என்று வினவியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 


சமூக நீதியைப் பற்றி பேசலாமா?


நான் என்ன தீண்டத்தகாதவனா என்று கேட்டவர் தான் தயாநிதி மாறன். கூட்டணிக் கட்சித் தலைவரைப் பார்த்து கருணாநிதி நீங்கள் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படக் கூடாது. உங்களுக்கென்று தொகுதி உள்ளது. அதில் தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று சொன்னார்.நேற்று (மே 26) மேடையில் சமூக நீதி பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின் இதைப் பற்றியும் பேசியிருந்தால் சமூக நீதி என்பது என்னவென்று தெரிந்து கொண்டு பாரதப் பிரதமர் சென்னையிலிருந்து கிளம்பியிருப்பார் அல்லவா? 


திராவிட மாயை:


திராவிட மாயை புத்தகத்தை எடுத்துப் பாருங்கள் அதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சுரேஷ் ராஜன் எப்படியெல்லாம் பேசினார் என்று தெரிந்து கொள்ளலாம். அதைப் பற்றி தனியாகவே பேசும் அளவுக்கு அதில் தகவல்கள் உள்ளன.


இதை வைத்துக் கொண்டு பொருளாதார வளர்ச்சி சமூக நீதி ஒன்றிணைந்த வளர்ச்சி என்று பேசியிருப்பது நகைப்புக்கு உரியது.


அதே மேடையில் சமூக நீதியின் அடையாளமாக எல்.முருகன் அமர்ந்திருந்தார். அவர் அருந்ததியர் குடும்பத்தில் இருந்து எளிமையான பின்னணியைக் கொண்டு வந்தவர். அவர் கட்சியில் கடுமையாக உழைத்து இன்று இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார் நமது பாரதப் பிரதமர். அமைச்சர் எல்.முருகன் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றபோது எளிமையின் அடையாளமாகச் சென்றார். அந்த சிவப்புக் கம்பளத்தில் வேட்டியில் தோன்றினார். அதை பிரதமர் பேசும்போது சுட்டிக் காட்டினார். உங்கள் மண்ணின் மைந்தன் தமிழர் மாண்பை அடையாளத்தை பிரான்ஸில் நிலைநிறுத்தி வந்துள்ளார் என்று சுட்டிக் காட்டினார்.


1950ல் சரக்கு சமன்படுத்துதல் கொள்கை என்ற ஒன்றை நேரு கொண்டு வந்தார். 1992 வரை இது நடைமுறையில் இருந்தார். இது தமிழகத்திற்கு நன்மை பயக்கவில்லையா? 


இதைப் பற்றி ஏன் முதல்வர் ஸ்டாலின் அந்த விழாவில் பேசவில்லை. முதல்வர் என்னவோ அவர் குடும்பத்தினர் மட்டுமே தமிழகத்தை வண்டி கட்டி இழுப்பதுபோல் பேசுகிறார்."


இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


முன்னதாக நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இருந்தனர். பிரதமருக்கு 4 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார். நீட் விலக்கு, ஜிஎஸ்டி வரி நிலுவையை அளித்தல் உள்ளிட்டவற்றை அவர் வலியுறுத்தியிருந்தார்.