தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2023 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவைக்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார்.
அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்ற பாரதியாரின் பாடலோடும், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என்று சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முடித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஆளுநர் திராவிட நாடு, திராவிட மாடல், பெரியார், கலைஞர், அண்ணா உள்ளிட்ட பகுதி அடங்கிய பக்கத்தை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அரசு ஆளுநருக்குப் பேசக் கொடுத்த உரையே அவைக் குறிப்பில் இடம்பெறத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதைக் கேட்ட ஆளுநர் ரவி, முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது பாதியிலேயே சட்டப் பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:
''தமிழ்நாடு அரசால் தயாரிக்க உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப் பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!
தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுநருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பதுதான் நாகரிகமும், மரபும் ஆகும்!
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது!
ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.