நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் முதலில் சபாநாயகர் அப்பாவு இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக பேசினார். அதன்பின்னர் மீண்டும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மீண்டும் இந்த மசோதா குறித்து பேசினார்.


 


அதன்பின்னர் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது அவர்கள் கடந்த முறை இந்த மசோதாவை நிறைவேற்றிய போது பாஜக வெளிநடப்பு செய்தது. அப்படி இருக்கும் போது எப்படி ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறுவீர்கள். இம்முறையும் நாங்கள் வெளிநடப்பு செய்ய உள்ளோம் என்று கூறினார். 


 






அவருக்கு பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன், “ஒரு மசோதா நிறைவேற்றப்படும் போது அப்போது அவையில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு அளித்தால் அது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது தான். இந்த முறையும் நீங்கள் வெளிநடப்பு செய்தால் நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றுவோம்” எனக் கூறினார். 


இதைத் தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “நிராகரிக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்ற மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டுவந்துள்ளனர்.எங்களது கேள்வி இது தேவைதானா?;எல்லா மாணவர்களும் சமூக நீதியுடன் பயில நீட் தேவை என்பதே  மத்திய அரசின் நிலைப்பாடு” எனக் கூறினார்.


 






அதன்பின்னர் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதாவிற்கு பாஜக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளித்துள்ளன.  நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


மேலும் படிக்க: ‛நீங்களே காலி பண்ணிடுவீங்க போல...’ சபாநாயகர் பேச்சை வழிமறித்த அமைச்சர் துரைமுருகன்!