உட்காந்துகிட்டு என்னை மிரட்டக்கூடாது என எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனிடம் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக பேசினார்.
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் அருண் மொழி தேவன் சட்டப்பேரவையில் இன்று பேசினார். அப்போது பேசிய அவர், “கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் வார்டு எண் பத்தில் மொத்தம் 115 ஆதிதிராவிடர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு சமுதாயக்கூடம் கட்ட போதிய இட வசதி இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே அம்மன் அர்ஜுனன் ஏதோ குறுக்கிட்டு சபாநாயகர் அப்பாவுவிடம் சீறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பாவு, “அம்மன் அர்ஜுனன் நீங்க ஒரு ஆள் அதிமுகவில் இல்லை. 66 பேர் இருக்கிறீர்கள்.
இரண்டு நாட்களில் 66 பேருக்கும் துணைக்கேள்விகள் கொடுக்க முடியாது. உட்காந்துகிட்டு இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது.
கேள்விக்கு தொடர்பு இருந்தாதான் நேரம் கொடுப்பேன். அது என் விருப்பம். மிரட்டல்லாம் விடக்கூடாது. அவ்வளவு பேருக்கும் எப்படி துணைக்கேள்வி தர முடியும்? ஆளுங்கட்சிக்கு ஒன்னு எதிர்க்கட்சிக்கு ஒன்று என்றுதான் தந்து கொண்டிருக்கிறோம்.
கேட்காத ஆள் பார்த்துதான் நேரம் கொடுக்கப்படுகிறது. ஒரே ஆள் தான் நேரம் கேட்கிறார். பேசாத ஆட்களை பார்த்துதான் நேரம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் உட்காந்து பார்த்துட்டு இருக்கீங்க. உங்க கட்சி உறுப்பினர் இப்படி உட்காந்துட்டு பேசிட்டு இருக்க கூடாது. நான் நடவடிக்கை எடுப்பேன்.
எல்லா விஷயத்தையும் சட்டப்படி, முறைப்படி, ஜனநாயகப்படி தான் எல்லாம் நடக்கிறது. உட்காந்து பேசிட்டு இருக்கிறது நாகரீகம் இல்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கீங்க. நீங்க பாருங்க” எனத் தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு நிலவியது.