தெருநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பேரிடர் நிவாரண நிதி, முதலமைச்சர் பொது நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சட்டப்பேரவையில் நாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ கே.சி.கருப்பண்ணன் கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளதால் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்கள் பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் அறிவிப்புகளை வெளியிட்டனர்
அதில் “தெருநாய் கடித்து உயிரிழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
பேரிடர் நிவாரண நிதி, முதலமைச்சர் பொது நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து இந்த இழப்பீடு வழங்கப்படும். நாய் கடித்து மாடு உயிரிழந்தால் ரூ.37 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும்.
நாய் கடித்து ஆடு உயிரிழந்தால் ரூ.4000 வழங்கப்படும். தெருநாய் கடித்து உய்ரிழந்த 1,149 பிராணிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும். தெருநாய்களுக்கு கருத்தடை செய்வது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த அறிவிப்பில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கவும் நாய் இனக்கட்டுப்பாட்டு விதிகள் 2023க்கு உட்பட்டு தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் சுமார் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது அவசியம் என தெரிவித்திருந்தது.