2022ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை, கொரோனா பரவல் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்த கூட்டத்தொடர் மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நடப்பாண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் தமிழ்த்தாயுடன் தொடங்கியது.
கூட்டம் தொடங்கியவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கினார். அப்போது, மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக தி.மு.க. தலைமையிலான அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதை கண்டித்து அ.தி.மு.க., வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடரில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி, நாகை எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ. பனையூர் பாபு ஆகியோர் நீட் விவகாரத்தில் ஆளுநர் முறையாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
வி.சி.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சிறிது நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தை நிறைவு செய்தது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்களின் வீடுகளில் தொடர்ந்து ரெய்டு உள்ளிட்ட தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சட்டசபை கூட்டத்தொடர் ஒமிக்ரான் பரவல், கொரோனா கட்டுப்பாடு காரணமாக சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைக்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்