டாஸ்மாக் மதுபானக் கடைகளில் புகார்கள் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனால், பெரும்பாலான கடைகளில் இன்னும் கூடுதல் விலை கொடுத்தே மதுபானங்களை குடிமகன்கள் வாங்கிச் செல்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள மதுப்பிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டது ஏபிபி நாடு. இதோ அவர்களின் எண்ணங்கள்...
ஆறுமுகம், விழுப்புரம்:
நாங்க ஒரு நாளைக்கு வேலைக்கு சென்றால் 300 ரூபாய்தான் சம்பளம். அதை கொண்டுவந்து உடம்பு வலிக்காக 120 ரூபாய் கொடுத்து ஒரு குவாட்டர் கேட்டால், 120 ரூபாய் குவாட்டருக்கு 130 ரூபாய் கேட்கிறார்கள். அந்த இடத்தில் நாங்கள் பத்து ரூபாய்க்காக சண்டையிடுவது கிடையாது. எங்களுக்கு அந்த நேரத்தில் உடம்பு வலியைப் போக்குவதற்கு கண்டிப்பாக சரக்கு தேவை.அங்குமிங்குமாக தேத்தி 120 ரூபாய் எடுத்துக்கொண்டு கடைக்கு வந்தால் 120 ரூபாய் குவாட்டர் 130 ரூபாய் வரை விற்கின்றனர். இதனால் சைடிஸ் வாங்குவதற்குக் கூட காசு இல்லாமல் போய்விடுகிறது.
ராஜேந்திரன், மயிலாடுதுறை:
டாஸ்மாக் கடைகளில் அரசு ஒரு விலை வைத்து மதுவை விற்பனை செய்ய செல்லுது, ஆனால் இங்கு வேலை பார்க்கும் ஆட்கள் அவங்க இஷ்டத்துக்கு 5, 10, 15 னு வாய்க்கு வந்த அளவுக்கு, பாட்டில் விலையைவிட கூட வாங்குராக. நாங்க நாள் கூலி வேலைக்கு போயிட்டு உடல் அசதிக்காக வாங்கும் குறைந்த சம்பளத்தில் ஒரு பங்கை எடுத்துட்டு குடிக்க வந்தா, இவங்களுக்குனு ஒரு பங்கு கூடுதலாக தரவேண்டி இருக்கு. இதை ஏன்னு கேட்ட மறுநாள் சரக்கு தரமாட்டேனு செல்லுறாங்க. இதையெல்லாம் முதல் அமைச்சர்தான் சரி பண்ணனும்.
ராமமூர்த்தி, கரூர்:
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையில் எப்போதும் மது வாங்கி அருந்துவேன். நான் கடந்த 30 ஆண்டுகளாக மது அருந்துகிறேன். இதுவரை நான் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதில்லை. குறிப்பிட்ட MRP விலை மட்டுமே கொடுத்து மதுவை வாங்கி வருகிறேன். எனக்கு எந்த இடத்திலும் விலை அதிகம் வாங்கியதாக தெரியவில்லை.
அருணாச்சலம், தூத்துக்குடி:
எல்லா டாஸ்மாக்கிலும் 5 ரூவா கூடுதலா வாங்கத்தான் செய்றாங்க. என்ன செய்ய, பழகிட்டு. கடையில் உள்ளவர்கள் ரூ 5 வாங்கி முழுசா வைச்சிக்கிறது இல்ல. மேலிடத்துக்கு ரூ 2 கொடுக்காகளா, மீதி உள்ள 3 ரூபாயில் கடைல வேலை பார்க்கும் நால்வரும் பிரிச்சி எடுத்துக்கிறாக. இதில் போதைய போட்டுட்டு 200 கொடுத்துட்டு 500 கொடுத்தேன்னு சொல்லி சண்ட போடுதான்க. அதையும் அவுக பார்க்கனும். இருந்தாலும் 5 அதிகம் தான். குடிச்சி பழகிட்டோம்; கேட்குறத கொடுத்துட்டு சத்தம் இல்லாம போயிடனும்.
இது போல் தமிழ்நாட்டில் மேலும் பல ஊர்களிலும் கருத்து கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவே கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், கம்யூட்டர் பில்லிங் முறையை அறிமுகப்படுத்தாதவரை இது தொடரும் என்கின்றனர். இதற்கு அரசு தான் பதிலளிக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்