தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரை வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ தமிழகத்தில் கடந்த எட்டு மாத திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற 8 மாத காலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு. சிறுமியர் பாலியல் பலாத்காரம் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச்செய்தி பத்திரிகைகளிலும், ஊடகத்திலும் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முததமைச்சர், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கவனிப்பதில் எந்தவித கவனமும் செலுத்தவில்லை இதனால் திறமையில்லாத திமுக அரசு என்பது நிருபணமாகி உள்ளது.




தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. வெளி மாநிலத்திலிருந்து சர்வசாதாரணமாக வாகனங்கள் மூலம் டன் கணக்கில் குட்கா கொண்டு வரப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் காவல்துறை தலைவர் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிவிப்பை வெளியிடுகிறார். இதிலிருந்து தமிழ்நாட்டில் சர்வசாதாரனமாக போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவது தெளிவாக தெரிகிறது. இந்த போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதை கட்டுப்படுத்த தவறிய அரசு, திமுக அரசு.


 தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம், கட்டப் பஞ்சாயத்து மீண்டும் தலை தூக்கியுள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பெய்த மழையால் சென்னை மாநகரத்தில் பெரும்பாலான வீதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாயினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மருத்துவ வசதி ஆகியவை முறையாக இந்த அரசு செய்து கொடுக்கவில்லை. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீர் தேங்கியதற்கு அம்மா அரசுதான் காரணம் என்கிறார்.


Also Read | TN Lockdown Update: சனி, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு?? அதிகரிக்கும் கொரோனாவால் தீவிர ஆலோசனையில் முதல்வர்!


ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதமே தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். வடகிழக்கு பருவமழை 10-வது மாதம் தான் துவங்குகிறது. 5 மாத காலம் இடைவெளி உள்ளது. இந்த கால கட்டத்தில் முறையாக தூர் வாரியிருந்தால் தண்ணீர் விரைந்து வடிந்திருக்கும். மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள். திமுக அரசு தூர் வாராமல், எங்கள் ஆட்சியை குறைசொல்வது வேடிக்கையாக உள்ளது.




2015ம் ஆண்டு அம்மா தமிழக முதல்வராக இருந்தபோது, கனமழையால் சென்னை மாநகர மக்கள் பாதிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். ஆனால் தற்போது திமுக அரசு கன மழையால் பாதிப்புக்குள்ளான சென்னை மாநகர மக்களுக்கு எந்தவித நிவாரணத் தொகையையும் வழங்கவில்லை. கடந்த தை பொங்கல் அன்று அம்மாவின் அரசு எல்லா இல்லங்களிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக பொங்கல் தொகுப்புடன், பொங்கல் பரிசாக ரூ.2,500/ வழங்கினோம். ஆனால், இந்த அரசு வழங்கவில்லை. அரசு பொங்கல் பரிசுத் தொகையினை கொரோனா நோய் தொற்றினால் பெருமளவு வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வழங்காதது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.


அம்மா மினி கிளினிக் ஒரு சிறப்பான திட்டம். நகரம். ஒன்றியப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு, அப்பகுதிகளில் உள் மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இத்திட்டத்திற்கு அம்மாவின் (ஜெயலலிதா) பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இத்திட்டத்தை இந்த திமுக அரசு மூடியுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.




அம்மாவின் அரசு மீண்டும் அமையும். அப்போது கண்டிப்பாக அம்மா மினி கிளினிக் மீண்டும் துவங்கப்படும். ஏழை மக்கள் மீது அக்கரையில்லாத அரசு - திமுக அரசு. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காதது, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாதது, நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க தவறியது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது. தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீதும், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் மீதும் திட்டமிட்டு பொய் வழக்குகள் போடுவது கண்டிக்கத்தக்கது.


விசாரணை என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளை காவல் துறையினர் அழைத்துச் சென்று துன்புறுத்துகிறார்கள். அழைத்துச் சென்ற நிர்வாகிகளை 2, 3 நாட்கள் எங்கு வைத்துள்ளனர் என்ற நிலையே தெரியாத சூழ்நிலை உள்ளது.  காவல் துறை, திமுக-வின் ஏவல் துறையாக இருக்கிறது. ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல் துறை பேசப்பட்ட காலம் போய் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுவது வேதனை அளிக்கிறது. ஆளும் திமுக அரசின் கட்சி நிர்வாகிகள் அதிகாரிகளை மிரட்டி, பணி செய்யவிடாமல் இருப்பது வாடிக்கையாகி விட்டது."


இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண