தமிழகத்தில் பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 1,03,798 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2731 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 674 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்த திடீர் அதிகரிப்பால் தமிழக அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் அடுக்கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
அடுத்தகட்ட கட்டுப்பாடுகள்:
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக டெல்லியில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 10 வரையிலான கட்டுப்பாடுகளை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு.!
இரவு நேர ஊரடங்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு தடைவிதிப்பது, கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு போன்ற கட்டுப்பாடுகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்குக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது
தியேட்டர்களை பொறுத்தவரை தற்போது 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கேற்ப கட்டுப்பாடுகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் ஆலோசனையில் முதல்வர் ஈடுபடுவதால் விரைவில் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்